நட்புணர்வுடன் ஒன்றிணைந்து வாழ இறைவனை நோக்கி செபிப்போம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
நாம் உண்ண இருக்கின்ற இந்த உணவையும் நம்மையும் இந்த உணவிற்காக உழைத்த அனைவரையும் இறைவன் ஆசீர்வதிக்க ஒன்றிணைந்து செபிப்போம் என்றும், நட்புணர்வுடன் கூடிய இந்த தருணத்தைப் போன்று நமது வாழ்விலும் நாம் எப்போதும் ஒன்றிணைந்து வாழ இறைவனை நோக்கி செபிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை ஏழாவது உலக வறியோர் நாளை முன்னிட்டு வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்ற உணவு விருந்தில் வறியோர் ஏறக்குறைய 1250 பேருடன் உணவருந்துகையில் இவ்வாறு செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவன் நம்மையும் இந்த உணவையும் ஆசீர்வதிப்பாராக என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உணவைத் தயாரித்த மக்களையும், ஏழை மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக உதவிகள் செய்பவர்கள், முன்னோக்கி நகர்த்திச் செல்பவர்கள் என அனைவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக என்று கூறி செபித்தார்.
உரோம் நகரைச் சுற்றியுள்ள ஏழைகள், வீடற்றவர்கள் என ஏறக்குறைய 1250 பேருடன் மதிய உணவு உண்ட திருத்தந்தை அவர்கள் உணவு வேளை முடிந்து திரும்புகையில் இந்த நிகழ்வு நன்முறையில் நடைபெற உழைத்த ஹில்டன் அறக்கட்டளை மற்றும் அதில் பணிபுரியும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்விற்காக நன்கொடையளித்தவர்கள், பொருளுதவி செய்தவர்கள், சமைத்தவர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து தொடர்ந்து அவர்களது பணியினை சிறப்பாக செய்ய வலியுறுத்தினார் திருத்தந்தை.
அதன்பின் கூடியிருந்த அனைவருக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் தனது சிறப்பான ஆசீர் என்று கூறிய திருத்தந்தை தனது அப்போஸ்தலிக்க ஆசீரை அனைவருக்கும் வழங்கி அங்கிருந்து விடைபெற்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்