குடும்பங்களின் அன்னையாக இணைந்து செல்லும் திருஅவை
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருஅவை ஒரு தாயாக குடும்பங்கள் மற்றும் பெற்றோர்களின் அருகில் அவர்களோடு இணைந்து செல்கின்றது. அவர்களது கல்விப்பணியில் அவர்களுக்கு உறுதுணையளிக்கின்றது என்றும், நாம் அனைவரும் இணைந்த ஒன்றே திருஅவை என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 11 சனிக்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் ஐரோப்பிய பெற்றோர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஏறக்குறைய 100 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெற்றோராக மாறுவது என்பது வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சிகளில் ஒன்று என்றும், புதிய ஆற்றல், வேகம் மற்றும் உற்சாகத்தைப் பெற்றோர்கள் பெறுகின்றார் என்றும் கூறினார்.
குழந்தைகளை அன்புடன் கவனித்துக் கொள்ளுதல், உள்மன வளர்ச்சி மற்றும் மனப்பக்குவம் பெற வழிவகை செய்தல், சுதந்திரமான மனநிலையை அளித்தல் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைக் கற்பித்தல், பள்ளி வாழ்க்கையை அமைதியாகக் கையாளுதல் போன்றவற்றைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நேர்மறையான எண்ணங்கள், பாலினம் தொடர்பான சந்தேகங்களுக்கு பதிலளித்தல், போன்றவற்றை குழந்தைகளுக்கு வழங்குவது பெற்றோர்களின் கடமை என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மது, புகை, ஆபாச காணொளிகள் மற்றும் செய்திகள், சூதாட்ட விளையாட்டுக்கள் போன்ற அச்சுறுத்தலிகளிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
குழந்தைகளுக்கான கல்வி மற்றும் இளையோர் வேலைவாய்ப்பு
நாம் வாழும் இச்சமூகத்தில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கல்வியானது பொதுவான இலக்கை நோக்கிய ஒத்துழைப்பு, பொறுப்பு, கடமை உணர்வு, பொது நலனுக்காக நம்மை அர்ப்பணித்தல் போன்றவற்றில் பயிற்சி அளிப்பதாகும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இளையோர்க்கு அளிக்கப்படும் வேலை வாய்ப்பானது அவர்களை நம்பிக்கையுள்ள மனிதர்களாக மாற்றி அனைத்து விதமான மதிப்புக்களையும் நாம் வாழ்கின்ற சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகவாழ்விற்கு தங்களது பங்களிப்பை வழங்கும் திறனையும் அளிக்கின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும் அண்மைய ஆண்டுகளில் திருஅவை இளையோரோடு தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுடன் பொதுவான உறுதிப்பாட்டை ஒருங்கிணைப்பதற்காக உலகளாவிய கல்வி ஒப்பந்தத்தை மேற்கொண்டு வருகின்றது என்பதனை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், கலாச்சாரம், கல்வி, நிறுவனம், மேய்ப்புப்பணி, போன்றவற்றிற்கு இடையில் குடும்பம் மற்றும் அதன் உறவுகளை குழந்தைகளின் வாழ்வில் மையமாக வைத்து செயல்பட வலியுறுத்தி வருகின்றது என்றும் கூறினார்.
ஒரு குழந்தைக்கு கல்வி கற்பிப்பது ஒரு உண்மையான சமூகப் பணி என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆரோக்கியமான சமூகத்தின் வேர்களாக அனைத்து நிலைகளிலும் உள்ள பெற்றோரின் சமூகப் பங்கு அங்கீகரிக்கப்படுவது முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்