தேடுதல்

பணியின்போது Holy Sepulchre அமைப்பின் உறுப்பினர்கள் பணியின்போது Holy Sepulchre அமைப்பின் உறுப்பினர்கள்   (ANSA)

சமூகத்தில், பலவீனமானவர்களைப் பலப்படுத்துங்கள்!

உருவாகுதலும் உருவாக்குதலும் பிறரன்புப் பணியின் ஊற்றாக உங்கள் வாழ்வு முழுவதும் அமையவேண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உங்களின் சொந்த அடையாளத்தில் நீங்கள் வலுவாக இருக்கும்படியாகவும், வயதுமுதிர்ந்தோர், நோயாளர்கள், புலம்பெயர்ந்தோர் போன்ற மிகவும் பலவீனமான சகோதரர் சகோதரிகளுக்குப் பணியாற்றவும் ஒரு பொதுநிலையினர் அமைப்பாக நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 9, இவ்வியாழனன்று, knights of holy Sepulchre என்னும் பொதுநிலையினர் அமைப்பினரைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு உரைத்த திருத்தந்தை, தொடக்கம் மற்றும் தற்போதைய உருவாக்கம், நடைமுறை மற்றும் ஆன்மிகம், இவை நான்கு வழிகாட்டுதல்களும் சிலுவை அடையாளத்தில் குறிப்பிடப்படுகின்றன என்றும், இது நீங்கள் அணிந்துள்ள உங்கள் மேலங்கிகளில் (mantles) தெளிவாக விளங்கி உங்கள் ஆன்மிகத்தை உயிர்ப்பிக்கிறது என்றும் எடுத்துக்காட்டினார்.

பல நூற்றாண்டுகளாக நீங்கள் சிறப்புப் பாதுகாவலர்களாக உங்களை அர்ப்பணித்துள்ள வெற்றுக் கல்லறை, எல்லாவற்றிற்கும் மேலாக, தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாத, அதனால் அவரைத் தடுத்து நிறுத்த முடியாத சிலுவையில் அறையப்பட்டவரின் எல்லையற்ற அன்பின் அடையாளமாக விளங்குகின்றது (காண்க உரோ 6:8-9) என்றும், அவரது திருஉடல் மற்றும் திருஇரத்தத்தின் மறைபொருளின் வலிமை, நம் அனைவரையும் அவருடைய உறுப்புகளாக இணைக்கிறது (காண்க 1 கொரி 10:17) என்றும் விளக்கினார் திருத்தந்தை.

உருவாகுதலும் உருவாக்குதலும் பிறரன்புப் பணியின் ஊற்றாக உங்கள் வாழ்வு முழுவதும் அமையவேண்டும் என்றும், இந்தக் கண்ணோட்டத்தில் உங்கள் அமைப்பின் வரலாற்றைப் படிக்கவும், செவிமடுத்தல் மற்றும் இறைவேண்டலின் பின்னணியில், உங்களின் அடுத்திருப்போரின் தேவைகளுக்குப் பதிலளிக்கும் திறன்களைப் பெறுவதற்கும் உங்களைப் பயன்படுத்துங்கள் என்றும் அறிவுறுத்திய திருத்தந்தை, இது திருஅவைக்கும் உலகிற்கும் இன்று நீங்கள் செய்யக்கூடிய ஒரு சிறந்த பணி என்றும் குறிப்பிட்டார்.   

ஆகவே, இந்தப் பாணியில் உங்கள் பணியைத் தொடரவும், உருவாக்கத்தின் பல்வேறு கட்டங்களில் அதை உண்மையுடன் எடுத்துச்செல்லவும் நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறினார் திருத்தந்தை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2023, 14:08