தேடுதல்

உரோமின் புறநகர்ப்பகுதியில் ஏழைமக்களையும் அகதிகளையும் சந்தித்து உரையாடிய திருத்தந்தை உரோமின் புறநகர்ப்பகுதியில் ஏழைமக்களையும் அகதிகளையும் சந்தித்து உரையாடிய திருத்தந்தை  (ANSA)

ஏழைகளின் குடியிருப்புக்குச் சென்ற திருத்தந்தை

ஏழைக் குடும்பங்களுக்கு குடியிருப்புகளில் அடைக்கலம் கொடுத்து அவர்களை பராமரித்து பின் அவர்கள் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள உதவி வருகிறது உரோம் பங்குதளம் ஒன்று.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உரோமின் புறநகர்ப்பகுதியில் உள்ள இன்முக வரவேற்பின் அன்னைமரியா பங்குதளத்தை(Our Lady of Hospitality) நவம்பர் மாதம் 16ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று மாலை சென்று சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகரின் Tor Bella Monaca, Torre Angela, Torre Gaia என்ற பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு உதவிவரும், Due Torri – Villa Verde யின் இன்முக வரவேற்பின் அன்னைமரியா பங்குதளத்தில், உள்ளூர் ஏழைமக்கள் மற்றும் குடிபெயர்ந்தோரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பகுதியின் 40 அருள்பணியாளர்களையும் தனியாகச் சந்தித்து அவர்களோடு அமர்ந்து ஒன்றரை மணி நேர நீண்ட உரையாடலில் கலந்துகொண்டார்.

1985ல் கட்டியெழுப்பப்பட்ட இந்த இன்முக வரவேற்பின் அன்னை மரியா பங்குதளம், ஏழைக் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதோடு, அவர்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்கென 12 வீடுகளையும் கொண்டுச் செயல்படுகிறது.

அப்பகுதி ஏழைமக்களையும் அகதிகளையும் சந்தித்து உரையாடிய திருத்தந்தை, அந்த வீடுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள ஏழைமக்களையும் சந்தித்து அவர்களோடு உரையாடினார்.

ஏழைக் குடும்பங்களுக்கு வீடுகளில் அடைக்கலம் கொடுத்து ஓரிரு ஆண்டுகள் அவர்களை பரமரித்து பின் அவர்கள் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள உதவி வருகிறது இந்த பங்குதளம்.

அருள்பணியாளர்களுக்கும் பொதுநிலையினருக்கும் இருக்க வேண்டிய ஒத்துழைப்பையும், ஏழைகள் மீது அன்புகொண்டு ஆற்றப்படும் இந்த பணியின் தொடர்ச்சியையும் மீண்டும் வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2023, 15:56