தேடுதல்

வத்திக்கான் வளாகத்தில் திருப்பயணிகள் வத்திக்கான் வளாகத்தில் திருப்பயணிகள்  (ANSA)

துன்புறும் சூடான் மக்களோடு உடனிருக்கின்றேன்

கிறிஸ்தவர், யூதர்கள், முஸ்லீம்கள் என எந்த மக்களாக, எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மனிதர்கள் ஒவ்வொருவரும் புனிதமானவர்கள், கடவுளின் பார்வையில் மதிப்புமிக்கவர்கள், அவர்கள் நிம்மதியாக வாழ உரிமையுண்டு

மெரினா ராஜ் - வத்திக்கான்

பல மாதங்களாகப் போரினால் துன்புறும் சூடான் மக்களோடு தனது உடன் இருப்பப் வெளிப்படுத்துவதாகவும், அமைதியான தீர்வுகளை கண்டறிந்து அதற்காகப் பணியாற்ற உள்ளூர் தலைவர்களுக்கு இதயத்திலிருந்து அழைப்புவிடுப்பதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 12 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரினால் தங்களது சொந்த நாடுகளையும் குடும்பங்களையும் விட்டு பிரிந்து வாடும் அனைத்து மக்கள் மீதான தனது ஆழ்ந்த வருத்தத்தையும் வெளிப்படுத்தினார்.

மனிதாபிமான உதவிகளை அணுகுவதை ஊக்குவித்தல், பன்னாட்டு சமூகத்தின் பங்களிப்புடன் அமைதியான தீர்வுகளைக் கண்டறிதல் போன்றவற்றில் பணியாற்ற அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், துன்புறும் நம் உடன் சகோதர சகோதரிகளை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

போரினால் பாதிக்கப்படும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் மக்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், துயர் என்னும் இருளில் வாடும் அம்மக்களை அணைத்து அவர்களுக்காக செபிப்பதாகவும் எடுத்துரைத்தார்.    

ஆயுதங்கள் ஒருபோதும் அமைதியைக் கொண்டுவராது என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வரும் திருத்தந்தை அவர்கள், காசாவில் பிணையக் கைதிகளாக இருக்கும் மக்கள் அனைவரும் குறிப்பாக சிறார், முதியோர், அனைவரும் விடுவிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கிறிஸ்தவர், யூதர்கள், முஸ்லீம்கள் என எந்த மக்களாக, எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மனிதர்கள் ஒவ்வொருவரும் புனிதமானவர்கள், கடவுளின் பார்வையில் மதிப்புமிக்கவர்கள், அவர்கள்  நிம்மதியாக வாழ உரிமையுண்டு என்றும், இதயத்தின் கடினமான தன்மையை விட மனிதநேய உணர்வு மேலோங்க வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து ஜெபிப்போம், நம்பிக்கையை இழக்காமல் இருப்போம் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு Laudato Si என்னும் திருமடல் செயல்பாடுகளுக்கான அடித்தளம் தொடங்கப்பட்டது என்பதை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் மாற்றத்திற்கான இம்முயற்சியில் இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் தன் நன்றியினைத் தெரிவித்து, இப்பாதையில் அவர்கள் தொடர்ந்து முன்னேறிச் செல்ல ஊக்குவிப்பதாகவும் எடுத்துரைத்தார்.

மேலும் சூழலியல் தொடர்பாக துபாயில் நடைபெற உள்ள COP28 சூழலியல் மாற்றத்திற்கான மாநாடு நன்முறையில் நடைபெற செபிக்கவும் திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்பிக்கையுள்ள உக்ரைன் மக்கள், புனித யோசபாத்தின் 400ஆவது ஆண்டை சிறப்பிக்கும் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த மக்கள் மற்றும், பசிலியன் துறவறசபையைச் சார்ந்த திருப்பயணிகள் என அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,     துன்புறுத்தப்பட்ட உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ அம்மக்களுடன் இணைந்து செபிப்பதாக எடுத்துரைத்து உக்ரைன் மக்களுக்காக செபிக்க மறக்க வேண்டாம் என்றும் திருப்பயணிகளிடமும் கேட்டுக் கொண்டார்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2023, 15:09