கிறிஸ்துமஸ் குடில் மற்றும் மரம் பெத்லகேமை நினைவூட்டுகின்றது
மெரினா ராஜ் – வத்திக்கான்
நமது வீடுகள் மற்றும் பொதுஇடங்களில் வைக்கப்படும் கிறிஸ்து பிறப்பை எடுத்துரைக்கும் ஒவ்வொரு குடிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெத்லகேமில் நிகழ்ந்தவற்றை நமக்கு நினைவூட்டுகின்றன என்றும், நன்றியுணர்வு, மென்மை, செபம், சில நேரங்களில் கண்ணீர் போன்றவற்றை நம்மில் வரச்செய்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 9 சனிக்கிழமை 2023 இவ்வாண்டு வத்திக்கான் வளாகம் மற்றும் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கிறிஸ்து பிறப்பு குடில்கள் வைக்க உதவிய இத்தாலியின் Rieti மற்றும் Macra பகுதியின் பிரதிநிதிகள் ஏறக்குறைய 4000 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியின் Macra பகுதியில் உள்ள Valle Maira விலிருந்து கொண்டுவரப்பட்டு வத்திக்கான் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம், இத்தாலியின் Rieti பகுதியினரால் உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடில் போன்றவற்றிற்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை அவர்கள், வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்து பிறப்பு குடிலை பெத்லகேம் என்று குறிப்பிடப்படும் கிரேச்சோ என அழைப்போம் என்றும் கூறினார்.
கடவுள் தனது மகனை மனிதனாக, எளியவராக, ஏழையாக, பாதுகாப்பற்றவராக, படைத்தார் என்றும், புனித பூமியில் வாழ்பவர்கள் தற்போது அனுபவிக்கும் துன்பத்தில் அவர்களோடு ஆன்மிக நெருக்கத்தையும் ஆதரவையும் அளிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பரபரப்பான நமது வாழ்வில் அமைதி மற்றும் செபத்திற்கான ஏக்கத்தை நம்மில் குடில்கள் ஏற்படுத்துகின்றன என்றும், அமைதியாக மனதில் வைத்து அனைத்தையும் சிந்தித்து செபித்த அன்னை மரியா நமக்கு எல்லாவற்றிலும் முன்மாதிரிகையாக இருக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 9 சனிக்கிழமை மாலை வத்திக்கான் வளாகத்தில் பனிபோன்ற வெண்ணிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுடர்விட உள்ள கிறிஸ்துமஸ் மரமானது, நமது பொதுவான இல்லமாகிய இப்பூமிப்பந்தைக் காப்பதன் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துரைக்கின்றது என்றும், நமது இந்த சிறிய முயற்சிகள் சூழலியல் மாற்றத்தின் அவசியத்தையும் கடவுள் நமக்களித்த கொடைக்காக நன்றியுணர்வையும் வெளிப்படுத்துகின்றன என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்