தேடுதல்

"Miulli" மருத்துவமனை பிரதி நிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் "Miulli" மருத்துவமனை பிரதி நிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (VATICAN MEDIA Divisione Foto)

ஏழை நோயாளிகளுக்காக உருவான Miulli மருத்துவமனை

Francesco Miulli மருத்துவமனையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் அர்ப்பணம் நிறைந்த மனதுடன் பணியாற்றுகின்றார்கள்

மெரினா ராஜ் – வத்திக்கான்

"Francesco Miulli" மருத்துவமனையானது சமூகம் மற்றும் ஏழை நோயாளிகளின் நலனுக்கான நலவாழ்வுப் பணியை எப்போதும் மேம்படுத்தும் ஒரு நல்ல சூழலை வளர்க்கின்றது என்றும், அதன் சுற்றுப்புறம் மற்றும் தேசிய அளவில் ஒரு விலைமதிப்பற்ற வளமாகத் திகழ்கின்றது என்றும் கூறினார்.

டிசம்பர் 18 திங்கள் கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் இத்தாலியின் "Francesco Miulli" மருத்துவமனையின் பிரதிநிதிகளை சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  பணியின் தரம், மக்களின் வாழ்வில் கவனம் செலுத்தும் பாதை போன்றவற்றில் தொடர்ந்து முன்னேறிச் செல்லவும் அவர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

புலம்பெயர்ந்தோருக்கான மருத்தகக் கட்டிடம் திறக்க இருப்பது குறித்து எடுத்துரைத்து அவர்களை பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Francesco Miulli மருத்துவமனையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் அர்ப்பணம் நிறைந்த மனதுடன் பணியாற்றுகின்றார்கள் என்றும் கூறினார்,

மேலும், மனிதர்களை முன்னிலைப்படுத்துதல், அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல் போன்றவற்றில் தொடர்ந்து உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதர்களை முன்னிலைப்படுத்தும் பணி

ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஏழை நோயாளிகளுக்கான மருத்துவமனையாக உருவான Miulli மருத்துவமனை, பாதிக்கப்பட்டவர்கள், அடைக்கலம், உதவி மற்றும் வரவேற்பு நாடுபவர்களுக்கு அதனை வழங்கும் பாதுகாப்பான இடமாக இன்று வரை விளங்குகின்றது என்றும், மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் (மத்தேயு 25:40) என்ற நற்செய்தி வரிகளுக்கு ஏற்ப, பணியில் ஏழைகளை முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஏழை நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் அதன் கட்டமைப்புக்கள் போன்றவற்றைப் புதுப்பித்ததன் வழியாக ஆற்றல் மிக்கவர்களாகத் தொடர்ந்து பணியாற்றுகின்றார்கள் என்று அவர்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், 600 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள், அறுவை சிகிச்சை அறைகள், இயந்திரங்கள் போன்றவற்றுடன் புதிய மருத்துவமனை உருவாகியுள்ளது குறித்தும் எடுத்துரைத்தார்.

அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல்

இத்தாலியப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பல ஆண்டுகால அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் மியுலி மருத்துவமனை, பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளது என்றும், முதுகலைக்கல்வி, பால்டெக்னிக் கல்வி என வளர்ந்து உயர்மட்ட தொழில் வல்லுநர்கள் இத்தாலியில் வந்து செயல்பட ஊக்குவிக்கும் வகையில் பரந்த எல்லைகளுடன் திறன்களை வளப்படுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 December 2023, 11:43