தேடுதல்

போர்த்துக்கல் லிஸ்பனில் இளையோர் தினக் கொண்டாட்டம் (கோப்புப்படம்) போர்த்துக்கல் லிஸ்பனில் இளையோர் தினக் கொண்டாட்டம் (கோப்புப்படம்)  (AFP or licensors)

செவிசாய்த்தல் என்பது அன்பின் செயல்!

சமுதாயத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்தவர்களிடமும், அவருடைய மக்களைச் சேராதவர்களிடமும் கடவுளின் இருப்பை அங்கீகரித்தார் நமதாண்டவர் இயேசு : திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இளையோரே, இன்று நீங்கள் கடவுளுக்கும் திருஅவைக்கும் உரியவர்களாக இருக்கின்றீர்கள், திருஅவையின் முழுமையாக இருக்க அதற்கு நீங்கள் தேவைப்படுகிறீர்கள் என்றும், திருஅவையாக, நீங்கள் உலகில் பிரசன்னமாகியிருக்கும் உயிர்த்தெழுந்த ஆண்டவரின்  திருஉடல் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

டிசம்பர் 28, இவ்வியாழனன்று, 'ஒன்றிணைந்த பயணம்" என்ற கருப்பொருளில் Taizé  குழுவால் Ljubljana-வில் ஏற்பாடு செய்யப்பட்ட 46-வது ஐரோப்பிய இளையோர் கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அண்மையில் போர்த்துக்கலின் தலைநகர் லிஸ்பனில் நடைபெற்ற உலக இளையோர் தினங்கள், திருஅவையாகவும் குழுமமாகவும், கடவுளுடனும் மற்றவர்களுடனும் நட்புறவின் அழகிய அனுபவத்தை வாழ உங்களுக்கு உதவியது என்றும் அச்செய்தியில் நினைவுபடுத்தியுள்ளார் திருத்தந்தை.

மௌனம் மற்றும் செவிசாய்த்தல் ஆகியவற்றின் மதிப்புகள் முடக்கப்பட்ட சத்தமில்லாத உலகில் நாம் வாழ்கிறோம் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இந்தச் சூழலில், செவிசாய்த்தலின் ஆழமான பரிமாணத்தை மீண்டும் கண்டறிய உங்களை அழைக்கின்றேன் எனவும் கூறியுள்ளார்.

செவிசாய்ப்பது என்பது அன்பின் செயல். இது நம்பிக்கையின் இதயத்தில் உள்ளது. செவிமடுக்காமல் சிறிதளவே நாம் வளர்ச்சி காணயியலும். செவிசாய்ப்பது என்பது  மற்ற நபருக்கு அவர்கள் இருக்க வேண்டிய இடத்தை அளிக்கிறது என்றும், சத்தமாக கத்துபவர் கேட்கத் தகுதியானவர் என்ற எண்ணம் நமக்கு அடிக்கடி இருக்கும் என்றும் விளக்கிய திருத்தந்தை, எதிர்பாராதவிதமாக, இன்று நாம் வன்முறைகள் அதிகம் நிலவும் கடினமான காலங்களில் வாழ்கிறோம் என்றும், மோதல்கள் மற்றும் போர்கள் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

ஆகவே, தாராள மனப்பான்மை, சேவை, தூய்மை, வலிமை, மன்னிப்பு, நம்பகத்தன்மை ஆகியவற்றின் அழகுக்கு சாட்சியாக, இந்த உலகம் வழங்காத பிற கனவுகளைக் காட்ட, ஒரு வித்தியாசமான உலகத்தை, செவிசாய்க்கும், உரையாடல் மற்றும் திறந்த மனப்பான்மை கொண்ட ஒரு உலகத்தை உருவாக்கத் துணிய வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை.

நமது சமூகங்களில் வாழ்க்கையின் தரமான மாற்றத்தை நோக்கி பணியாற்றுவதன் அடிப்படையில், ஒன்றிணைந்து பயணிப்பது என்பது நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று என எடுத்துக்காட்டிய திருத்தந்தை, ஒன்றிணைந்து பயணிப்பது என்பது ஓரங்கட்டப்படுதல், மூடப்படுதல், விலக்குதல் மற்றும் ஒரு பிரிவினரின் நிராகரிப்புக்கான பாதையை அகற்றுவதாகும் என்றும் விளக்கினார்.

நிலையான மற்றும் திறந்த உலகத்திற்காக, மக்கள், கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கு இடையே உறவு பாலங்களை உருவாக்குபவர்களாக நீங்கள் மாறுகிறீர்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை, யாரையும் தம் பாதையில் இருந்து விலக்கி வைக்காத நம் குருவான ஆண்டவராகிய இயேசுவைப் போல வாழ்வதற்கு நம்மை நாமே அர்ப்பணிக்க வேண்டும் என்றும், இறைத்தந்தையின் உறவில் வேரூன்றிய கிறிஸ்து தம்மிடம் வந்தவர்களுடன் தனது வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டார் என்றும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 December 2023, 14:45