சீரோ-மலபார் வழிபாட்டு பிரச்சனைகளுக்கு உதவ பிரதிநிதி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
சீரோ-மலபார் வழிபாட்டுமுறை திருஅவையில் திருவழிபாட்டு சடங்குமுறைகள் குறித்து எழும்பியுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும் நோக்கத்தில் டிசம்பர் 12 செவ்வாய்க்கிழமையன்று கேரளாவுக்கு மீண்டும் பயணம் மேற்கொண்டுள்ளார் திருத்தந்தையின் பிரதிநிதி, பேராயர் Cyril Vasil.
ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் திருத்தந்தையின் பிரதிநிதியாக கேரளாவின் எர்ணாகுளம்-அங்கமலி உயர் மாவட்டத்திற்கு சென்று திரும்பியுள்ள ஸ்லோவாக்கியாவின் கோஸிச் பேராயர் வாசில் அவர்கள், தற்போது மீண்டும் அதே உயர் மறைமாவட்டத்தில் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளச் செல்லும் முன்பு டிசம்பர் 11ஆம் தேதி வத்திக்கானில் திருத்தந்தையைச் சந்தித்து கலந்து ஆலோசித்தார்.
ஏற்கனவே இவ்வாண்டு டிசம்பர் 7ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சீரோ மலபார் வழிபாட்டுமுறை கத்தோலிக்கர்களுக்கு அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில், பரிந்துரைக்கப்பட்டுள்ள திருவழிபாட்டுமுறைகள் தொடர்பான பிரிவினைகளையும் வன்முறைகளையும் களைய வேண்டும் என விண்ணப்பம் ஒன்றையும் விடுத்திருந்தார்.
ஒரு கிறிஸ்தவ அடிப்படைவாத குழுவாக மாறுவதையோ, திருஅவையின் தண்டனைக்கு உள்ளாவதையோ தவிர்க்க வேண்டும் என அச்செய்தியில் திருத்தந்தை விண்ணப்பம் ஒன்றையும் விடுத்திருந்தார்.
அதே டிசம்பர் 7ஆம் தேதி, சீரோ-மலபார் திருஅவையின் உயர் பேராயர், கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்கள் பணி ஓய்வுப் பெற்றதும், எர்ணாகுளம்-அங்கமலி பெருமறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பிரதியாகச் செயல்பட்ட பேராயர் Andrews Thazhath அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்