தேடுதல்

திருத்தந்தையின் கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரேஆண்டவராகிய மெசியா

“காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள் சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது” என்ற எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகளுக்கேற்ப இருளில் சுடர்ஒளியாய் துன்பத்தில் ஆறுதல் தரும் மகிழ்வாய் மனிதஉரு எடுத்து நமக்காகப் பிறந்துள்ளார் இயேசு. அவரது பிறப்பின் மகிழ்வைக் கொண்டாடி மகிழும் வண்ணம் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் கிறிஸ்துமஸ் பெருவிழா திருப்பலியினை தலைமையேற்று நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் உள்ளூர் நேரம் மாலை 7.30 மணியளவில் அதாவது இந்திய இலங்கை நேரம் நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்ற திருப்பலியில் கர்தினால்கள்  ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்கள் பலர் திருத்தந்தையுடன் இணைந்து கூட்டுத்திருப்பலியினை நிறைவேற்றினர். முதல் வாசகமானது இஸ்பானிய மொழியில் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து பதிலுரைப்பாடலானது இத்தாலிய மொழியிலும், இரண்டாம் வாசகமானது ஆங்கிலத்திலும் வாசித்தளிக்கப்பட்டது. அதன்பின் திருத்தொண்டர் ஒருவர் நற்செய்தி வாசகத்தை வாசித்தளித்ததைத் தொடர்ந்து திருத்தந்தை கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி மறையுரையை ஆற்றினார். 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறையுரையை நிறைவு செய்ததும்  நம்பிக்கையாளர்கள் மன்றாட்டானது சீனம், பிரெஞ்சு, அரபு, போர்த்துக்கீசியம், வியட்நாம் ஆகிய  மொழிகளில்  வாசித்தளிக்கப்பட்டன. திருத்தந்தை மற்றும் திருஅவையின் தலைவர்கள், அரசுதலைவர்கள் புலம்பெயர்ந்தோர், பலவீனமானவர்கள், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் மற்றும் அமைதி என்னும் கொடைக்காகவும் நம்பிக்கையாளார் மன்றாட்டுக்கள் எடுத்துரைக்கப்பட்டன.

காணிக்கைப் பவனியின் போது மூன்று குடும்பத்தார் திருத்தந்தையிடம் காணிக்கைப் பொருள்களை அளித்து மகிழ்ந்தனர்.

காணிக்கை மன்றாட்டு. நற்கருணை மன்றாட்டைத் தொடர்ந்து திருப்பலியின் நிறைவில் கூடியிருந்த மக்களுக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா ஆசீரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பீடத்தின் முன் வைக்கப்பட்டிருந்த பாலன் இயேசுவின் திருஉருவத்தை முத்தமிட்டு அதனை பெருங்கோவிலின் இடது புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குடிலில் சென்று வைத்தார். அப்போது இத்தாலி, மெக்சிகோ, இந்தியா மற்றும் கொரியாவைச் சார்ந்த சிறார் 10 பேர் திருத்தந்தையுடன் பவனியாக கைகளில் மலர்கொத்துடன் நடந்து வந்தனர். இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறாருக்கு ஆசீரளித்து செபமாலையைப் பரிசளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 December 2023, 12:34