கொரியா தலத்திருஅவை மற்றும் திருப்பீடஉறவின் 60ஆம் ஆண்டு நிறைவு
மெரினா ராஜ் - வத்திக்கான்
இளையோர் நம்பிக்கையின் வழித்தோன்றல்கள் என்றும், கிறிஸ்துவுக்கான விலைமதிப்பற்ற சான்றுகள் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 11 திங்கள் கிழமை தென் கொரியாவிற்கும் திருப்பீடத்திற்கும் இடையிலான தூதரக உறவுகளின் 60-வது ஆண்டு நிறைவிற்கு வாழ்த்து தெரிவித்து கொரிய தலத்திருஅவையின் ஆயர் பேரவைத்தலைவராகிய SUWON மறைமாவட்ட ஆயர் MATTHIAS RI IONG-HOON அவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துத் தந்திச்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நற்செய்தி அறிவிப்பு, உள்ளூர் தலத்திருஅவையின் வளர்ச்சி மற்றும் கொரிய சமூகத்தின் நல்வாழ்வுக்கான அதன் பங்களிப்பு போன்றவற்றிற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், குறிப்பாக கலாச்சார மற்றும் ஆன்மிக பலன்களை ஓரங்கட்டப்பட்ட, ஏழ்மையான நம்பிக்கையிழந்த மக்களுக்கு கொரிய தலத்திருஅவை வழங்குகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய இளைஞர்கள் இந்த மாபெரும் நம்பிக்கையின் வாரிசுகளாகவும், இத்தகைய மனப்பான்மையுடன் உலகின் பணிகளுக்குத் தயாராகும் வகையில் கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற சாட்சிகளாகவும் அவர்கள் திகழ, தான் தொடர்ந்து செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2014 ஆம் ஆண்டு கொரியாவிற்கு தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், இயேசுவின் மீது அன்பு கொண்ட அன்பினால் தங்களது வாழ்வை நம்பிக்கையின் விதையாக விதைத்தவர்களான கொரிய மறைசாட்சிகள் அருளாளர்களாக உயர்த்தப்பட்ட திருப்பலியில் கலந்து கொண்டதையும் குறிப்பிட்டுள்ளார்.
அம்மறைசாட்சிகள் விதைத்த விதைகள் இன்று மலர்ந்து துடிப்புள்ள தலத்திருஅவையாக திகழ்கின்றது மணம் பரப்புகின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், 2027 ஆம் ஆண்டு சியோலில் நடைபெற உள்ள உலக இளையோர் நாளுக்காக நம்பிக்கை மற்றும் சான்றுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வழியாக இன்றைய இளையோர் தங்களையே தயாரிக்க தான் தொடர்ந்து செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்