திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை - எப்பத்தா திறக்கப்படு
மெரினா ராஜ் - வத்திக்கான்
டிசம்பர் 13 புதன்கிழமை திருவையில் புனித லூசியா நினைவு நாளானது சிறப்பிக்கட்ட நிலையில் வத்திக்கானில் உள்ள திருத்தந்தை தூய ஆறாம் பவுல் அரங்கில் அமர்ந்திருந்த திருப்பயணிகளுக்கு புதன் மறைக்கல்வி உரையினை ஆற்ற அரங்கத்திற்கு வந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரும் கரவொலி எழுப்பி திருத்தந்தையை மகிழ்வுடன் வரவேற்க, அவர்களை கரமசைத்து வரவேற்றார் திருத்தந்தை. அதன்பின் சிலுவை அடையாளம் வரைந்து புதன் மறைக்கல்வி உரையினை ஆரம்பித்தார்.
மாற்கு நற்செய்தி ஏழாம் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள காது கேளாதவர் நலம்பெறுதல் என்ற நற்செய்தி வரிகளானது இத்தாலியம், ஆங்கிலம், அரபு, போர்த்துக்கீசியம், பிரெஞ்சு, இஸ்பானியம், ஆகிய பல மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.
மாற்கு 7; 31-35
மீண்டும் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார். பிறகு, வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி “எப்பத்தா” அதாவது “திறக்கப்படு” என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.
அதனைத்தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பு பேரார்வத்தின் இறுதி பகுதியாக “எப்பத்தா திருஅவையே திறந்திடு” என்ற மையக்கருத்தில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிமடுப்போம்.
திருத்தந்தையின் மறைக்கல்விஉரை
அன்பான சகோதர சகோதரிகளே,
நற்செய்தி அறிவிப்புப் பேரார்வம் பற்றிய நமது தொடர் மறைக்கல்வியின் நிறைவுப் பகுதியை இன்று நாம் காணலாம். இறைவார்த்தை நம்மை ஆட்கொள்ள அனுமதித்ததாலும், நற்செய்தி அறிவிப்புப் பேரார்வத்துடன் உழைத்த பலரின் சான்றுள்ள வாழ்வை அறிந்து கொண்டதாலும், நற்செய்தியை அறிவிக்கும் ஆர்வத்தினை நம்மிடையே நாம் வளர்த்துக் கொண்டோம். திருமுழுக்கு அருளடையாளத்தின்போது குருவானவர் கூறியதை நினைவில் கொள்வோம். அவர் நமது காதுகளை, உதடுகளைத் தொட்டு, “செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும் ஆண்டவர் இயேசு செய்தருளினார், நீ விரைவில் அவரது வார்த்தையை தந்தையாகிய இறைவனின் புகழும், மகிமையும் விளங்கக் காதால் கேட்கவும், அவ்விசுவாசத்தை நாவால் அறிக்கையிடவும் அவரே செய்தருள்வாராக” என்று கூறுவார்.
இதன் வழியாக இயேசுவை அறிவிக்கும் நற்செய்தியாளர்களாக நாம் மாறுவதற்கான அருளைத் தந்தையாம் கடவுளிடம் கேட்கின்றோம். எப்பத்தா திறக்கப்படு என்ற வார்த்தையை இன்று நாம் வாசிக்கக் கேட்ட நற்செய்திப் பகுதி எடுத்துரைக்கின்றது. நற்செய்தியாளர் மாற்கு காதுகேளாதோர் நலமடைந்த பகுதியில் என்ன நடந்தது என்பதனை எடுத்துரைக்கின்றார். மீண்டும் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். இப்பகுதியில் பெரும்பாலும் வசிப்பவர்கள் புறவினத்தார். இயேசுவின் நெருங்கிய நண்பர்களான சீடர்கள் இயேசுவின் இந்த பயணத்தை உண்மையிலேயே விரும்பி இருக்க மாட்டார்கள். இந்நிலையிலேயே இயேசு அங்கு இருந்த காதுகேளாத ஒருவரைக் குணப்படுத்துகின்றார். பழைய ஏற்பாடு முழுவதும் காதுகேளாதவர்கள் குணம்பெற்றது போன்ற எந்த ஒரு நிகழ்வும் இடம்பெற்றதில்லை. காது கேளாமை,மற்றும் வாய் பேசாமை என்பது கடவுளின் அழைப்பிற்கு எதிராக நம்மை நாமே மூடிக்கொள்வதாகும். இங்கு மூடப்பட்டு கிடப்பது சீடர்களின் உள்ளம். புறவினத்தார்களை ஒதுக்கிவைக்கும் அந்த மூடப்பட்ட உள்ளத்தை இயேசு திறக்கின்றார். மாற்கு நற்செய்தியாளர் ஒவ்வொரு முறையும் இந்த உணர்வினை தனது வரிகளில் வெளிப்படுத்துகின்றார். சீடர்களின் புரிதலின்மையை வெளிப்படுத்தி, சீடர்கள் தங்களது வழக்கமான பகுதிகளை விட்டு வெளியேறி வரவேண்டும் என்பதனை உணர்த்தும் விதமாக புறவினத்தாரான அம்மனிதரைக் குணப்படுத்துகின்றார் இயேசு. மக்கள் மற்றும் தாங்கள் சார்ந்துள்ள பகுதிகளிலிருந்து வெளியேறுவதற்கான அழைப்பினை சீடர்களுக்கு வழங்குகின்றார். உலகில் உள்ள எல்லா மக்கள், வெளிநாட்டவர்கள், தொலைதூரத்தில் இருப்பவர்கள், உடலாலும் உள்ளத்தாலும் காதுகேளாதவர்கள், ஒரே மொழியினைப் பேசாதவர்கள் ஆகிய அனைவரும் கடவுளின் மீட்பையும் விடுதலையையும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகின்றார் இயேசு.
இயேசு அரமேய மொழியில் எடுத்துரைக்கும் வார்த்தையான எப்பத்தா என்பது மற்றொரு அடையாளமாக சுட்டிக்காட்டப்படுகிறது. எப்பத்தா என்றால் திறக்கப்படு என்று பொருள். இது காது கேளாதவர்கள் மற்றும் வாய்பேசாதவர்களுக்கான வார்த்தை மட்டுமல்ல. மாறாக அக்கால சீடர்கள் மற்றும் இக்கால சீடர்களாகிய நமக்குக் கொடுக்கப்பட்ட ஓர் அழைப்பு. திருமுழுக்கு அருளடையாளத்தைப் பெற்றுள்ள நாம் அனைவரும் தூய ஆவியின் ஆற்றலால் நமது உள்ளத்தை திறக்க அழைக்கப்படுகின்றோம். இதன் வழியாக இயேசு ஒவ்வொரு தலத்திருஅவையையும் மக்களையும் பார்த்து திறக்கப்படு என்று கூறுகின்றார். நற்செய்தி அறிவிப்பு பிறருக்கு எடுத்துரைக்கப்படவும், சான்று பகரக்கூடிய வாழ்க்கை வாழவும் நாம் ஒவ்வொருவரும் தேவை என்று வலியுறுத்துகின்றார் இயேசு. நமது பொதுவான மற்றும் வழக்கமான சமயங்களுக்குள் நம்மை நாமே மூடிக்கொள்ளாமல் தூய ஆவியின் ஆற்றலால் நற்செய்தி அறிவிப்பாளர்களாக, மறைப்பணியாளர்களாக உந்தித்தள்ளப்பட தலத்திருஅவை திறக்கப்படட்டும் என்று அழைப்புவிடுக்கின்றார் இயேசு.
நற்செய்திகளின் முடிவில் கூட, இயேசு தனது இந்த மறைப்பணி விருப்பத்தை நமக்குத் தருகிறார். யோவான் நற்செய்தியின் இறுதியில் (21.1-18) அவர் தனது ஆடுகளுக்கு உணவளிக்கும் பணியை திருத்தூதர் பேதுருவிற்கு வழங்கி அனைவருக்கும் மேய்ப்பராக இருக்கும் உயரிய பணியினை அளிக்கின்றார். பன்முகத்தன்மை வாய்ந்ததும் பல்வேறு இன மக்களைக் கொண்டதுமான கலிலேயாவில் இப்பணியினை அளிக்கின்றார் இயேசு. தூய்மையான மற்றும் மிகவும் அடையாளம் காணக்கூடிய புனித மத இடமான எருசலேமில் அல்ல மாறாக புறவினத்தார்கள் வாழ்கின்ற கலிலேயாவில் அளிக்கின்றார். உலகில் உள்ள அனைத்து மக்களையும் நினைவுபடுத்தும் வகையில் 153 பெரிய மீன்களைப் பிடித்த அற்புதமான இடத்தில் அளிக்கின்றார். இறைமக்களின் மேய்ப்பர்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள நாம், மனிதரைப் பிடிப்பவர்களாக இருக்க வேண்டும், உலகக் கடலில் நற்செய்தி அறிவிப்பு என்னும் வலையுடன் நமது பாதுகாப்பு என்னும் கரையை விட்டு வெளியேற தயாராக இருக்க வேண்டும்.
சகோதர சகோதரிகளே, நாம் அனைவரும் திருமுழுக்கு அருளடையாளம் பெற்றவர்களாக, இயேசுவைப் பற்றி சான்றுபகரவும், அறிவிக்கவும் அழைக்கப்படுகின்றோம். ஒரே திருஅவையாக மறைப்பணியாளராக நற்செய்தி அறிவிப்புப் பணியில் மாற்றத்தை ஏற்படுத்த இறைவனின் அருளினை வேண்டுவோம். கலிலேயா கடலில் நின்ற இயேசு பேதுருவிடம் என்னை அன்பு செய்கின்றாயா என்று கேட்டார். அவருடைய ஆடுகளை பேணிக்காக்கச் சொன்னார்.
இறைவனை உண்மையாக அன்பு செய்கின்றேனா அவரை அறிவிக்க விரும்புகின்றேனா? அவரது சாட்சியாக வாழவும் அவரது சீடராக இருக்கவும் விரும்புகின்றேனா? சந்திக்கும் மனிதர்களில் இதயத்தளவில் சந்தித்து செபத்தின் வழியாக அவர்களை இயேசுவிடம் கொண்டு வருகின்றேனா? எனது வாழ்வை மாற்றிய நற்செய்தியின் மகிழ்ச்சி அவர்களது வாழ்வையும் அழகாக்க ஏதாவது செய்ய விரும்புகின்றேனா? என்று நம்மை நாமே கேள்விக்குட்படுத்துவோம்.
இவ்வாறு தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிகுந்த கவலை மற்றும் துன்பத்துடன் பாலஸ்தினம் மற்றும் இஸ்ரயேல் பகுதிகளில் போரினால் துன்புறும் மக்களை நினைவுகூர்ந்தார்.
காசாவில் மனிதாபிமான உதவிகள், தேவையில் இருக்கும் மக்களுக்குக் கிடைக்கப்பட செபிப்போம் என்றும், ஆயுதம் அல்ல அமைதியே என்றும் அமைதிக்கான தனது விண்ணப்பத்தை மீண்டும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறுதியாக, இளைஞர்கள், முதியவர்கள், நோயாளிகள், புதுமணத் தம்பதிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், டிசம்பர் 13 திருஅவையின் நினைவுகூரப்படும் கன்னியரும் மறைசாட்சியாளருமான புனித லூசியா திருவிழாவைக் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இத்தாலி மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில், இந்நாளில் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு பரிசுகளைப் பரிமாறிக்கொள்ளும் வழக்கத்தை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், நட்பையும் சான்றுள்ள கிறிஸ்தவ வாழ்வையும் பரிசாக ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள அனைவருக்கும் அழைப்புவிடுத்தார்.
மேலும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக இஸ்ரயேல், பாலஸ்தீனம், துன்புறுத்தப்பட்ட உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அமைதியின் பரிசு கிடைக்கப்பட செபிக்க மறக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறுதியாக விண்ணகத்தந்தையை நோக்கிய செபம் இலத்தீன் மொழியில் பாடப்பட்டதைத் தொடர்ந்து தனது அப்போஸ்தலிக்க ஆசீரை திருப்பயணிகளுக்கு வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்