குவாதலூப்பே அன்னை, நற்பண்புகளை வரவேற்க நமக்கு நினைவூட்டுகிறார்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நாம் சிறப்பிக்கும் குவாதலூப்பே அன்னை மரியாவின் திருவிழாவன்று முதலில் நம் நினைவுக்கு வருவது ஒரு விவசாயியின் எளிமையான உடையில் பதிக்கப்பட்ட கன்னி மரியாவின் உருவம் என்றும், இது இப்போது கடவுளின் தாயாம் அன்னை மரியாவை அண்டிவரும் திருப்பயணிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மெக்சிகோவில் காட்சியளித்த குவாதலூப்பே அன்னை மரியாவின் விழா டிசம்பர் 12-ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் சிறப்பிக்கப்பட்ட வேளை, அங்கு நிறைவேற்றப்பட்ட திருப்பலியின் மறையுரையின்போது இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித கன்னி மரியா காட்சியளித்த, புனித ஹுவான் தியேகோவின் மேலங்கியின் மீது பாதுகாக்கப்பட்ட அற்புத உருவத்தின் மேன்மையைக் குறித்த சிந்தனைகளை தனது மறையுரையில் வழங்கினார் திருத்தந்தை.
இந்தத் திருவுருவம் முதல் சீடரின், அனைத்து நம்பிக்கையாளர்களின் தாயின், மற்றும், திருஅவையின் உருவமாக விளங்குகிறது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, இது நாம் என்னவாக இருக்கிறோம், நம்மிடம் என்ன இருக்கிறது என்ற நமது தாழ்மையில் பதிக்கப்பட்டுள்ளது என்றும், இது மிகவும் மதிப்புக்குரியது அல்ல என்றாலும், கடவுளின் பார்வையில் இது மதிப்பிற்குரியதாகவே உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
சில பூக்களை சேகரிக்குமாறு ஹுவான் டியாகோவுக்கு அன்னை மரியா கொடுத்த ‘சிறிய பணி’ பற்றி எடுத்துக்காட்டிய திருத்தந்தை, கிறிஸ்தவ மறையுண்மையைப் பொறுத்தளவில், பூக்கள் என்பது, இறைவன் நம் இதயத்தில் விதைக்கும் நற்பண்புகளைக் குறிக்கிறது என்றும், இக்காரியத்தை நம்மால் செய்ய இயலாது என்றும் விளக்கினார்.
நமது பலவீனமான எதார்த்தத்தை நற்செயல்களால் நறுமணப் படுத்தவும், வெறுப்பையும் அச்சத்தையும் நீக்கவும் கடவுள் விரும்புகிறார் என்பதையும் இச்செயல் நமக்கு வெளிப்படுத்துகிறது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை
“உங்கள் தாயாக விளங்கும் நான், இங்கே உங்களோடு இருப்பதில்லையா?” என்ற அன்னை மரியாவின் வார்த்தைகள் மீது தனது கவனத்தைத் திருப்பிய திருத்தந்தை, இந்த வார்த்தைகள், நற்பண்புகளால் நிறைந்திருக்கும் இந்த எளிமையான ஆடையில் அன்னை மரியா நிரந்தரமாகப் பதிந்திருப்பதைக் காட்டுகிறது என்றும் குறிப்பிட்டார்.
இந்த நற்பண்புகள், அன்பின் சிறிய அடையாளங்களின் எளிமையில் நமது ஏழ்மையை நிரப்புகின்றன என்று உரைத்த திருத்தந்தை, கிறிஸ்துவைத் தன் மார்பில் சுமந்து செல்லும் ஒரு திருஅவையின் உருவத்தால், நம்மை அறியாமலேயே அவைகள் நமது மேலங்கியை ஒளிரச் செய்கின்றன என்றும் தெரிவித்தார்.
கிறிஸ்தவ மறைக்கு மனம் திரும்பிய மெக்சிகோ நாட்டு ஹுவான் தியேகோ என்பவருக்கு 1531ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காட்சியளித்த குவாதலூப்பே அன்னை மரியா, தான் தோன்றிய தெபேயாக் குன்றின்மீது தனக்கென ஓர் ஆலயம் எழுப்புமாறு ஆயரை விண்ணப்பிக்குமாறுக் கேட்டுக்கொண்டார்.
1474ஆம் ஆண்டு பிறந்த ஹுவான் தியேகோ தன் கடைசி காலத்தில் குவாதலூப்பே மரியன்னை திருத்தலத்தில் சேவையாற்றுவதிலேயே செலவிட்டு 1548ஆம் ஆண்டு தன் 74ஆம் வயதில் காலமானார்.
1531ஆம் ஆண்டு மரியன்னையை காட்சியில் கண்ட ஹுவான் தியேகோவை 2002ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி புனிதராக அறிவித்தார் புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்