தேடுதல்

பாலஸ்தீனத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பாலஸ்தீனத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்  (AFP or licensors)

‘வானதூதர்கள் அழுவதைக் கேளுங்கள்’ என்ற புதிய கிறிஸ்மஸ் பாடல்

பெத்லகேம் குடிலின் மேலேயுள்ள நம்பிக்கையின் ஒளி, புனித பூமியின் போர்களையும் அழிவையும் நிறுத்தும் என்ற செய்தியைத் தாங்கி நிற்கும் புதிய கிறிஸ்மஸ் பாடல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

போரால் துயர்களை அனுபவித்துவரும் புனித பூமியில் அமைதி நிலவ வேண்டும் என கிறிஸ்துமஸ் பாடல் மூலம் நிதியுதவிகளை திரட்டிவரும் பிரித்தானிய பாடகர் குழுவுக்கு தன் பாராட்டுக்களை வெளியிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தி இங்கிலாந்து திருஅவைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவையின் தலைவரும், வெஸ்ட்மின்ஸ்டர் பேராயருமான கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்களுக்கு திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால் அனுப்பப்பட்டுள்ளச் செய்தியில், புதிதாக வெளியிடப்பட்டுள்ள, ‘வானதூதர்கள் அழுவதைக் கேளுங்கள்’ என்ற கிறிஸ்மஸ் பாடல் புனித பூமியில் ஒப்புரவு, அமைதி மற்றும் ஒருமைப்பாட்டிற்கு தூண்டுதலாக இருக்கும் என்ற திருத்தந்தையின் ஆவல் வெளியிடப்பட்டுள்ளது.

பெத்லகேம் குடிலின் மேலேயுள்ள நம்பிக்கையின் ஒளி, புனித பூமியின் போர்களையும் அழிவையும் நிறுத்தும் என்ற செய்தியைத் தாங்கி நிற்கும் இந்த புதிய பாடல் வழி, அமைதிக்கான நிதியுதவியை பிரிட்டானிய பாடகர் குழு திரட்டிவருவதற்கு தன் நன்றியையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.

‘வானதூதர்கள் அழுவதைக் கேளுங்கள்’ எனத் துவங்கும் இந்த புதிய கிறிஸ்மஸ் பாடலைப் பாடி பிரித்தானிய இசைக்குழு திரட்டும் நிதி அனைத்தும்  Gaza Strip பகுதியில் போரால் பாதிக்கப்படுள்ளக் குழந்தைகளின் நலவாழ்வுக்கென செலவிடப்பட உள்ளது.

கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்களுக்கு திருத்தந்தையின் பெயரால் அனுப்பப்பட்டுள்ளச் செய்தி, இயேசு பிறந்த பெத்லகேம் நகரின் சிறப்பியல்புகளை எடுத்துரைப்பது குறித்தும் தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2023, 15:34