தேடுதல்

ஒளியின் சாட்சிகளாக இருங்கள்

ஒளியின் சான்றாக இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட இயேசுவைப் பற்றி எடுத்துரைக்கும் இறைவாக்கினராக திகழ்ந்தவர் திருமுழுக்கு யோவான்

மெரினா ராஜ் – வத்திக்கான்

நாம் தனியாக மீட்படைய முடியாது மாறாக கடவுளின் துணையுடன் வாழ்வின் ஒளியைக் கண்டறிய முடியும் என்றும், பணியார்வம், நிலைத்தத்தன்மை, தாழ்ச்சி, சான்றுள்ள வாழ்வு, கடவுளின் அருள் போன்றவற்றுடன் நாம் ஒவ்வொருவரும்  பிறர் வாழ்வில் ஒளிரும் விளக்குகளாக சுடர்விட முடியும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமுழுக்கு யோவான் போல வாழ வலியுறுத்தினார்.

திருவருகைக் காலத்தின் மூன்றாம் வார நற்செய்திப் பகுதியில் (யோவான் 1; 6-8 19-28) குறிப்பிடப்படும் திருமுழுக்கு யோவான் பற்றிய வரிகளை சுட்டிக்காட்டி பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒளியின் சான்றாக இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட இயேசுவைப் பற்றி எடுத்துரைக்கும் இறைவாக்கினராக திகழ்ந்தவர் திருமுழுக்கு யோவான் என்றும் கூறினார்.    

மிகச்சிறந்த மனிதராகத் திகழ்ந்த திருமுழுக்கு யோவானின் நேர்மையான செயல்பாடுகள் மற்றும் இணக்கமான வாழ்வினாலும் வார்த்தையாலும் ஈர்க்கப்பட்ட மக்கள் அனைவரும் அவரை நாடி வந்தனர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளிப்படையாக எடுத்துரைக்கும் மொழித்திறன், நேர்மையான செயல்பாடுகள், எளிமையான வாழ்க்கை போன்றவற்றால் அவருடைய சான்று வாழ்வு வெளிப்பட்டது என்றும் கூறினார்.  

தங்களது வெளிப்புறத்தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பிரபலமான பெரிய மனிதர்களிடமிருந்து இச்செயல்களால் திருமுழுக்கு யோவான் வேறுபட்டார் என்றும், நேர்மை சுதந்திரமான மனநிலை, பிறரைக் கவரும் வாழ்க்கை முறை போன்றவற்றால் ஒளிரும், மனிதர்களின் வாழ்வு, நமக்கு முன்மாதிரிகை என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இத்தகைய ஒளிரும் மனிதர்கள், நம்மை சாதாரண நிலையிலிருந்து உயர்த்தவும், பிறருக்கு நாம் முன்மாதிரிகைகளாக இருக்கவும் உதவுகின்றார்கள் என்றும், இவ்வகையான ஆண்களையும் பெண்களையும் இக்காலகட்டத்திற்கு ஏற்றவாறு இறைவன் அனுப்புகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.

இறைவனால் அனுப்பப்படும் இத்தகைய மனிதர்களை நாம் அடையாளம் கண்டு கொண்டு வாழ்கின்றோமா? அவர்களின் சான்றுள்ள வாழ்விலிருந்து ஏதாவது கற்றுக்கொள்ள முயல்கின்றோமா? அல்லது நாகரீகமான மனிதர்களின் வாழ்க்கை முறை மற்றும் மேலோட்டமான அணுமுறைகள் நம்மை ஆட்கொள்ள விட்டுவிடுகின்றோமா? என்று நம்மை நாமே கேள்விக்குட்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

தன்னை நாடி வந்த மக்களிடத்தில் நான் மெசியா அல்ல, மாறாக உங்களை மீட்கும் ஒளி, மெசியா, கடவுளின் செம்மறி, இயேசுவே என தெளிவாக எடுத்துரைத்தவர் திருமுழுக்கு யோவான் என்றும், மக்களிடத்தில் மதிப்பைப் பெற விரும்பாமல் பணிசெய்யும் மனநிலை கொண்டவராக கடவுளைப் பற்றி எடுத்துரைக்கும் ஒரு குரலாக தன்னை அடையாளப்படுத்தியவர் என்றும் கூறினார் திருத்தந்தை.  

திருமுழுக்கு யோவானைப் போல  தாழ்ச்சி, சான்றுள்ள வாழ்வு, கடவுளின் அருள் கொண்டு பிறரது வாழ்வை ஒளிரச் செய்யும் விளக்குகளாக இருக்கவும், அவர்கள் இயேசுவைச் சந்திப்பதற்கான வழியைக் கண்டறியவும் உதவுவோம் என்று திருப்பயணிகளுக்குக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒளியின் சான்றுகளாக கிறிஸ்துவின் சான்றுகளாக இந்த கிறிஸ்து பிறப்பு காலத்தில் எவ்வாறு இருக்க முடியும் என்று சிந்திப்போம் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2023, 13:23