நம்மோடு நடந்து நமக்கான அக்கறையை வெளிப்படுத்தும் அன்னை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அன்னை மரியாவைக் கொண்டாடுவது என்பது, தன் மக்களை வந்து சந்திக்கும் இறைவனின் அருகாமையையும் கனிவையும் கொண்டாடுவதாகும் என டிசம்பர் 12ஆம் தேதி தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மெக்சிகோவில் காட்சியளித்த குவாதலூப்பே அன்னைமரியாவின் விழா டிசம்பர் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று கொண்டாடப்படுவதையொட்டி, அன்னை மரியா குறித்த டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.
மக்களைச் சந்திக்கும் இறைவனின் அருகாமையையும் கனிவையும் கொண்டாடுவதாக அன்னைமரியாவைக் கொண்டாடுவது உள்ளது எனவும், இறைவன் நம்மை தனிமையில் விடுவதில்லை, நம்மோடு உடன் நடந்து நமக்கென அக்கறையை வெளிப்படுத்தும் ஓர் அன்னையை அவர் நமக்குத் தந்துள்ளார் எனவும், குவாதலூப்பே அன்னைமரியாவின் திருவிழாவன்று வெளியிட்ட டுவிட்டர் குறுஞ்செய்தியில் திருத்தந்தை கூறியுள்ளார்.
கிறிஸ்தவ மறைக்கு மனம் திரும்பிய மெக்சிகோ நாட்டு ஹுவான் தியேகோ என்பவருக்கு 1531ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காட்சியளித்த குவாதலூப்பே அன்னை மரியா, தான் தோன்றிய தெபேயாக் குன்றின்மீது தனக்கென ஓர் ஆலயம் எழுப்புமாறு ஆயரை விண்ணப்பிக்குமாறுக் கேட்டுக்கொண்டார்.
1474ஆம் ஆண்டு பிறந்த ஹுவான் தியேகோ தன் கடைசி காலத்தில் குவாதலூப்பே மரியன்னை திருத்தலத்தில் சேவையாற்றுவதிலேயே செலவிட்டு 1548ஆம் ஆண்டு தன் 74ஆம் வயதில் காலமானார்.
1531ஆம் ஆண்டு மரியன்னையை காட்சியில் கண்ட ஹுவான் தியேகோவை 2002ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி புனிதராக அறிவித்தார் புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்