புதன் மறைக்கல்வி உரை – இதயத்தைப் பாதுகாக்கக் கற்றுக்கொள்வோம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
டிசம்பர் 27 புதன்கிழமை கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் இரண்டாம் நாளும் 2023 ஆம் ஆண்டின் கடைசி வாரமுமாகிய இப்புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என்னும் புதிய தலைப்பில் தனது தொடர் மறைக்கல்வி உரையினை ஆற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன் தொடக்கமாக இதயத்தைப் பாதுகாக்கக் கற்றுக்கொள்வோம் என்னும் தலைப்பில் அறிமுக உரையுடன் அதனைக் குறித்து எடுத்துரைத்தார்.
கிறிஸ்து பிறப்பு பெருவிழா முடிந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மறைக்கல்வி உரையினை ஆற்ற அரங்கத்திற்குள் நுழைந்தார் திருத்தந்தை. மக்கள் கரவொலி எழுப்பி மகிழ்வுடன் திருத்தந்தையை வரவேற்றனர். உதட்டில் புன்னகையுடன் அவர்களுக்கு கரமசைத்து தனது மகிழ்வை வெளிப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிலுவை அடையாளம் வரைந்து புதன் மறைக்கல்வி உரைக் கூட்டத்தினை ஆரம்பித்தார். மாற்கு நற்செய்தியின் நான்காம் அதிகாரத்தில் உள்ள மூதாதையர் மரபு என்னும் தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் இத்தாலியம், ஆங்கிலம், அரபு, இஸ்பானியம், போர்த்துக்கீசியம், பிரெஞ்சு, என்பன போன்ற பல மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.
மாற்கு 7: 14,15,21
இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, “நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும் என்று கூறினார். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே....... தீமையை செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன
நற்செய்தி வாசகத்தைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என்னும் தலைப்பில் தனது புதிய மறைக்கல்வி தொடரினை ஆரம்பித்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக்கு இப்போது நாம் செவிமடுப்போம்.
புதன் மறைக்கல்வி உரை
அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!
இன்று நல்லொழுக்கங்கள் மற்றும் தீயொழுக்கங்கள் என்ற கருப்பொருளில் புதிய மறைக்கல்வி தொடரினை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். திருவிவிலியத்தின் ஆரம்பத்திலிருந்தே நாம் இதனைத் தொடங்கலாம். தொடக்கநூலில் இடம்பெறும் நமது ஆதிப்பெற்றோர் நிகழ்வு வழியாக தீமை மற்றும் சோதனையின் செயல்பாடுகளை திருவிவிலியம் நம் முன்வைக்கிறது. ஏதேன் தோட்டத்தில் சோதனையின் அடையாளமாக பாம்பு உருவகப்படுத்தப்படுகின்றது. பாம்பு ஒரு கொடிய விலங்கு. அது மெதுவாக தரையில் நகர்ந்து ஊர்ந்து செல்கிறது, சில சமயங்களில் அது இருப்பதை நாம் கவனிப்பதில்லை. ஏனெனில் அது தான் சார்ந்திருக்கும் சூழலுடன் இணைந்து விடுகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக இது மிகவும் ஆபத்தானது.
ஆதாம் மற்றும் ஏவாளுடன் உரையாடத் தொடங்கும் போது, பாம்பு தான் ஒரு நுட்பமான பேச்சாளர் என்பதை நிரூபிக்கின்றது. கெட்ட வதந்திகளைப் போல ஒரு தீமையான கேள்வியுடன் தனது உரையாடலைத் தொடங்குகின்றது. கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா? என்கின்றது பாம்பு. (தொடக்க நூல்3:1). இந்த வாக்கியமே தவறானது. கடவுள், உண்மையில், ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனியைத் தவிர, அதாவது நன்மை தீமை அறியும் மரத்தின் கனியைத் தவிர, ஆணுக்கும் பெண்ணுக்கும் தோட்டத்தின் அனைத்து கனிகளையும் வழங்கினார். இந்தத் தடையானது, சில நேரங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றது. மனிதன் தனது பகுத்தறிவைப் பயன்படுத்துவதைத் தடைசெய்வதற்காக அல்ல, மாறாக அது ஞானத்தின் அளவுகோலாகவே கடவுள் இந்த தடையை வைக்கின்றார். இதன் வழியாக, உங்களது வரம்புகளை மீண்டும் அறிந்து கொள்ளுங்கள், எல்லாவற்றிற்கும் தலைவராக உங்களை உணராதீர்கள், ஏனென்றால் பெருமையே அனைத்து தீமைகளுக்கும் ஆரம்பமாகும் என்று எடுத்துரைக்கின்றார். கடவுள் ஆதிப்பெற்றோர்களை படைப்பின் தலைவர்களாகவும் பாதுகாவலர்களாகவும் வைக்கிறார், ஆனால் பாம்பு அவர்களை நன்மை மற்றும் தீமைகளின் எஜமானர்களாக நீங்கள் ஆவீர்கள் என்று கூறுகின்றது. இது மனித இதயத்திற்கு மிகவும் ஆபத்தான குழியாகும். இதிலிருந்து நமது இதயத்தை நாம் ஒவ்வொரு நாளும் பாதுகாக்க வேண்டும்!
ஆதாம் மற்றும் ஏவாளால் பாம்பின் சோதனையை எதிர்க்க முடியவில்லை என்பதை நாம் அறிவோம். கடவுள் நல்லவரல்ல, நம்மை அவருக்கு அடிபணிய வைக்க விரும்பியவர் என்ற எண்ணம் அவர்கள் மனதில் பதிந்தது. அதனாலேயே எல்லாம் விழுந்தது. அன்பு அவர்களது மிகச்சிறந்த பரிசு, தீமை அவர்களது தண்டனை என்பதை ஆதிப்பெற்றோர்கள் விரைவில் புரிந்துகொண்டார்கள். அவர்கள் தவறு செய்துவிட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள கடவுளின் தண்டனை தேவையில்லை. மாறாக அவர்களின் சொந்த செயல்களே அவர்கள் அதுவரை வாழ்ந்த இணக்கமான உலகத்தை உடைத்துவிடுகின்றது. அவர்கள் கடவுளைப் போல மாறுவார்கள் என்று நினைத்தார்கள். மாறாக அவர்கள் ஆடையின்றி இருப்பதை உணர்ந்தார்கள். மேலும் அவர்கள் மிகவும் அச்சத்தால் ஆட்கொள்ளப்படுகின்றார்கள். ஏனென்றால் பெருமை அவர்கள் இதயத்தை ஆட்கொள்கின்றது. தீமையைக் கருத்தரிக்கக்கூடிய பூமிக்குரிய ஒரே உயிரினமான மனிதர்கள் இதயத்தில் பெருமை ஊடுருவிவிட்டால் யாரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது.
மேற்கூறியவற்றின் வழியாக, மனிதனிடம் தீமை என்பது பரபரப்பான முறையில் மனிதனில் தொடங்குவதில்லை என்பதை திருவிவிலியம் எடுத்துரைக்கின்றது. மாறாக அதற்கு முன்னதாகவே, ஒருவன் தீமையைக் கொண்டு அதனில் மகிழ்வடையும் போது அவன் தனது கற்பனையிலும் எண்ணங்களிலும் மழுங்கடிக்கப்பட்டு அதன் புகழ்ச்சி வார்த்தைகளில் சிக்கிக் கொள்கிறான் என்பதையும் வெளிப்படுத்துகின்றது. ஆபேல் கொலை செய்யப்பட்டது கல்லினால் அல்ல மாறாக காயீன் தனக்குள்ளேயே தன்னை ஒரு கொடிய வெறுப்பு கொண்டவனாக மாற்றியதினாலேயே கொலை செய்யப்பட்டான். கடவுளின் பரிந்துரைகளான, பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆளவேண்டும்” (தொ.நூ 4,7) என்பது இங்கு பயனற்றவையாகிவிடுகின்றன.
நீங்கள் ஒருபோதும் அலகையுடன் வாக்குவாதம் செய்யக்கூடாது. ஏனெனில் அலகை தந்திரமானது அறிவுக்கூர்மையுடையது. இயேசுவை சோதிக்கத் தூண்டுவதற்கு விவிலிய மேற்கோள்களைப் பயன்படுத்தியது. கண்ணுக்கு தெரியாத தீமையை நன்மை என்னும் ஒரு முகமூடியின் கீழ் மறைக்கும் வல்லமை கொண்டது. அதனால்தான் நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும், சிறிய விரிசல் நமக்குள் ஊடுருவ முயற்சிக்கும் போதும் உடனடியாக அதனை சரி செய்ய வேண்டும். போதை, மது, சூதாட்ட அடிமைத்தனம் போன்றவற்றினால் ஏற்படும் ஆபத்தை குறைத்து மதிப்பிட்டு அதனால் நம்மை இனி வெல்ல முடியாது என்று எண்ணி அந்த போதையில் விழுந்தவர்களும் பலர் உள்ளனர். அவர்கள் ஒரு அற்பமான போரில் வலிமையானவர்கள் என்று தங்களை நினைத்தார்கள். அதனால் மிகவும் சக்திவாய்ந்த எதிரிக்கு இரையானார்கள். தீமை நம்மில் வேரூன்றும் போது அது தீயொழுக்கம் என்று அழைக்கப்படுகிறது. அது அழிக்க கடினமாக இருக்கும் ஒரு களையாக மாறுகின்றது. கடின உழைப்பின் விலையினால் மட்டுமே அதை நம்மால் மாற்ற முடியும், அழிக்க முடியும். இயேசு ஒருபோதும் அலகையுடன் உரையாடியதில்லை. மாறாக அதனை விரட்டியடித்தார். பாலைவனச் சோதனையின்போது கூட திருவிவிலிய வார்த்தைகளைக் கொண்டே அதற்கு பதிலளித்தார். நாமும் கவனமாக இருப்போம். அலகையுடன் உரையாடலைத் தவிர்ப்போம். அது தனது மாயவலையில் நம்மை சிக்கவைத்துவிடும். நமது கதவுகளை ஜன்னல்களை, இதயத்தை மூட வைத்துவிடும்.
எனவே நீங்கள் உங்கள் இதயத்தின் காவலர்களாக இருக்க வேண்டும். செபம் மற்றும் மனித உடன் பிறந்த உறவுடன் வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் உலகை விட்டு வெளியேறி தனிமையில் பாலைவனத்தில் வாழ்ந்த துறவிகளின் வாழ்வும், பாலைவன தந்தையர்கள் மற்றும் புனிதர்கள் நமக்கு கொடுக்கும் பரிந்துரையும் இதுதான். பாலைவனம் சில சண்டைகளைத் தவிர்க்கும் இடமாகக் கருதப்படுகின்றது. கண்கள், காதுகள் எல்லாவற்றிற்கும் மேலாக இதயத்தைப் பாதுகாக்கவேண்டும். மனதிலும் இதயத்திலும் தோன்றும் ஒவ்வொரு எண்ணம் மற்றும் விருப்பத்தில் கிறிஸ்தவர்களாகிய நாம் ஒரு புத்திசாலித்தனமான பாதுகாவலர்களாக நடந்துகொண்டு இதயத்தைப் பாதுகாக்கவேண்டும். மேலும் நமது எண்ணமும் விருப்பமும் எந்தப் பக்கத்திலிருந்து வந்தது என்பதை அறியும் வண்ணம் நமக்குள் கேள்வி எழுப்பவேண்டும். அது கடவுளிடமிருந்து வந்ததா அல்லது சாத்தனிடமிருந்து வந்ததா என்று சிந்திக்கவேண்டும். அது கடவுளிடமிருந்து வந்தால், அது வரவேற்கப்பட வேண்டும். ஏனென்றால் அது மகிழ்ச்சியின் ஆரம்பம். ஆனால் சாத்தானிடமிருந்து வந்தால், அது வெறும் களைகள், தீமை என்று அறிந்து விலக்கப்படவேண்டும். அதன் விதை நமக்குச் சிறியதாகத் தோன்றினாலும் அது மனதில் வேரூன்றியவுடன், தீயொழுக்கம் மற்றும் மகிழ்ச்சியின்மையின் நீண்ட கிளைகளாக நமக்குள் உருவாகிவிடும். நம்முடைய இதயத்தை நாம் கண்காணிக்க வேண்டும். ஏனெனில் நம் ஒவ்வொரு ஆன்மிகப்போரின் சாதகமான விளைவுகள் அனைத்தும் நாம் இதயத்தை தொடர்ந்து கண்காணிப்பதன் பொருட்டே தீர்மானிக்கப்படுகின்றது. எனவே எப்போதும் நம் இதயத்தைக் கண்காணிப்பதில், பாதுகாப்பதில் விழிப்புடன் இருப்போம். அதற்கான அருளை இறைவனிடம் கேட்போம். இதயத்தைப் பாதுகாப்பவர் ஒரு பெரிய புதையலைப் பாதுகாப்பவர் ஆவார்.
இவ்வாறு தனது புதன் மறைக்கல்வி உரையினை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார். இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை அன்புடன் வரவேற்ற திருத்தந்தை அவர்கள், ஃபோக்கோலேர் இயக்கத்தின் அருள்பணியாளர்கள், Nuoro அருள்பணித்துவ மாணவர்கள் பல்வேறு பங்குத்தளங்களில் இருந்து வந்திருத்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார்.
இறுதியாக, இளைஞர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், புதுமணத் தம்பதிகள், மற்றும் முதியோர்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், பெத்லகேமின் குழந்தை இயேசு உங்கள் அனைவருக்கும் தனது ஒளியைக் கொடுக்கட்டும், இதன் வழியாக, புத்தாண்டில், அன்றாட செயல்கள் வழியாக, நற்செய்திக்கு ஊக்கமுள்ள வாழ்க்கை வாழுங்கள் என்றும் கூறினார்.
வன்முறை மற்றும் போரின் பயங்கரமான விளைவுகளை அனுபவிப்பவர்களுக்காக, குறிப்பாக துன்புறுத்தப்பட்ட உக்ரைனுக்காகவும், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் மக்களுக்காகவும் செபிக்க மறக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர் மிகவும் மோசமானது. போர்கள் முடிவுக்கு வர செபிப்போம் என்றும் கூறினார்.
இவ்வாறு உலக அமைதிக்காக தனது விண்ணப்பத்தை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த திருப்பயணிகளுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்