தேடுதல்

இத்தாலிய குடியரசின் அரசியல் தலைவர்களுடன் திருத்தந்தை இத்தாலிய குடியரசின் அரசியல் தலைவர்களுடன் திருத்தந்தை   (Vatican Media)

ஒருங்கிணைக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் பாதை

தவறு செய்பவர்களை உரிய மாண்புடன் அணுகுதல், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தல் போன்ற பொறுப்புக்களை உள்ளடக்கியது பொது ஒழுங்குப்பணி

மெரினா ராஜ் – வத்திக்கான்

புலம்பெயர்ந்தோர் என்போர் மக்கள் அனைவராலும் வரவேற்கப்படுபவர்களாக, உடன்நடப்பவர்களாக, ஒருங்கிணைக்கப்பட்டவர்களாக, உயர்த்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும், ஒருங்கிணைக்கப்பட்ட இத்தகைய புலம்பெயர்ந்தோர்க்கான பாதை இல்லையெனில் அது பேராபத்தாக இருக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 11 திங்கள்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் இத்தாலிய குடியரசின் அரசியல் தலைவர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொதுஒழுங்கு, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மேலாண்மை போன்றவை குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

பொது ஒழுங்கு

பொது ஒழுங்கு என்பது அரசியல் தலைவர்களது பணியின் முதன்மையான, முக்கியமான, நுட்பமான ஒன்றாகவும், அவசர காலச்சூழல்களில் மனித மாண்புடன் இணைக்கப்பட்ட ஒன்றாகவும் இருக்கின்றது என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.

சட்டமும் மனிதமாண்பும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், தவறு செய்பவர்களை உரிய மாண்புடன் அணுகுதல், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தல் போன்ற பொறுப்புக்களை உள்ளடக்கியது பொது ஒழுங்குப்பணி என்றும் கூறினார் மேலும், ஒழுங்கைக் காப்பாற்றுங்கள் ஒழுங்கு உங்களைக் காப்பாற்றும் உங்களை மீட்கும் என்பதனையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

தனிப்பட்ட வாழ்வில் ஒழுங்கு இல்லாமல், பொது ஒழுங்கை நம்மால் நிர்வகிக்க முடியாது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், பொது ஒழுங்கிற்கான பொறுப்பு என்பது இணக்கமான சகவாழ்வின் சூழலை உருவாக்குவதற்கான அழைப்பாக கருதப்படுகிறது என்றும், இதன் வழியாக வாழ்வில் எதிர்ப்படும் சிரமங்களை எதிர்கொண்டு சமாளிக்க ஆற்றல் பெற முடியும் என்றும் எடுத்துரைத்தார்.

மனசாட்சி, அர்ப்பண உணர்வுடன் பயிற்சி செய்து பணியாற்றும் அவர்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், பல தூக்கமில்லாத இரவுகளை தியாகத்துடன் கடக்கும் அவர்களது பணி நம் அனைவரின் நன்றிக்கு தகுதியானது என்றும் கூறினார்.

முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகள்

நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும், பாதுகாக்கப்பட வேண்டிய நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியை சரியான நேரத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் பாதுகாப்பதற்கான முயற்சிகளை ஒன்றிணைப்பது மிக முக்கியமானது மற்றும் அவசரமானது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இத்தாலியில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பேரழிவுகள் மற்றும் பாதிப்பின்போது அத்தலைவர்கள் ஆற்றிய பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

புலம்பெயர்ந்தோர் மேலாண்மை

ஐரோப்பாவிற்கு வர விரும்புபவர்கள் அடிமைகளைப் போல நடத்தப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகின்றார்கள், கொலை செய்யப்படுகிறார்கள் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், புலம்பெயர்ந்தோர் பணியில் ஒருங்கிணைப்பு, ஆக்கப்பூர்வமான ஒன்றிணைப்பு, ஆகியவற்றின் அடிப்படையில், அவர்களுக்கு ஓர் ஒழுங்கான வரவேற்பினை அளிக்கும் கடினமான பணி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 December 2023, 13:58