மிகவும் ஆபத்தான ஊழலில், விழிப்புடன் இருப்பது அவசியமானது
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஊழல் மோகம் மிகவும் ஆபத்தானது, அதில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும், ஒவ்வொரு செயலிலும் முழுமையான வெளிப்படைத்தன்மை, உறுதி விவேகம் மற்றும் இரக்கம் தேவை என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 11 திங்கள்கிழமை வரவுசெலவு கணக்குகளை மேற்பார்வையிடும் பொது அலுவலகத்தின் பணியாளர்கள் ஏறக்குறைய 12 பேரைச் சந்தித்தபோது சுதந்திரம், பன்னாட்டு நடைமுறைச் செயல்பாடுகளில் கவனம், தொழில் முறை ஆகியவை குறித்த கருத்துக்களை அவர்களுக்கு எழுத்துவடிவில் வழங்கினார் திருத்தந்தை.
வரவு செலவு கணக்குகளை மேற்பார்வையிடும் பொதுஅலுவலகத்தின் பணியாளர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்கள் எழுத்துவடிவில் வழங்கப்பட்டன.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு Motu Proprio சட்டத் தொகுப்பு அடிப்படையில் Fidelis dispensator et prudens அதாவது நம்பிக்கை மற்றும் விவேகமுள்ள பணியாளர் என்ற முறையில் வத்திக்கான் அமைப்பில் வரவு-செலவு கணக்குகளை மேற்பார்வையிடும் பொது அலுவலகம் இணைக்கப்பட்டதை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், மறைந்த திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களின் பணியின் தொடர்ச்சியாக சில பொருளாதார சீர்திருத்தங்களைத் தான் தொடங்க விரும்பியதையும் தனது கருத்தில் எடுத்துரைத்த்துள்ளார்.
சுதந்திரம்
வரவு செலவு கணக்குகளை நிர்வகிக்கும் பொதுஅலுவலகமானது பிற அமைப்புக்களைப் போல அல்ல மாறாக நன்கு சிந்திக்கப்பட்ட, தொண்டுச் செயலின் பொறுப்பை குறிக்கின்றது, அதன் உயரிய கொள்கையால் ஈர்க்கப்படுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
திருத்தப்பட வேண்டிய விதிகள், கணக்கியல், நிர்வாக நடைமுறைகள் ஆகியவற்றில் புகாரளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் கூட, சகோதர குறைத்திருத்த மனப்பான்மையால் எப்போதும் வழிநடத்தப்படுவது முக்கியம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நீதிமொழிகள் நூலிலுள்ள, ”தந்தை தன் அருமை மகனை கண்டிப்பதுபோல், ஆண்டவர் தாம் யாரிடம் அன்புகொண்டிருக்கின்றாரோ அவர்களைக் கண்டிக்கின்றார்” என்ற வரிகளையும் மேற்கோள்காட்டினார்.
ஒருங்கிணைந்த பயண உணர்வில், அதன் ஆற்றலில், பணிபுரியும் அலுவலகம், பிற திருப்பீடத்துறைகள், குறிப்பாக பொருளாதார அமைப்புகளுடன் ஒத்துழைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நினைவில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நம்மைத் தனிமைப்படுத்தும் போட்டிகளைத் தவிர்த்து வாழ வேண்டும் என்றும் கூறினார்.
பன்னாட்டு நடைமுறைகளில் கவனம்
பன்னாட்டு நடைமுறைகளில் சிறந்தவற்றைப் பயன்படுத்த ஊக்குவித்தல், மக்களிடையே சமத்துவத்தை மேம்படுத்துதல் போன்றவற்றிற்காக பன்னாட்டு சமூகங்களுடன் இணைந்திருப்பது முக்கியம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், அவைகள் திருஅவையின் படிப்பினைகளுக்கு முரணாக இல்லை என்றும் எடுத்துரைத்தார்.
தொழில்முறை
வரவு செலவு கணக்குகளை நிர்வகிப்பதில் பத்தாண்டுகளாக அப்பணியாளர்கள் ஆற்றிய பணிகளுக்கு நன்றியினைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், சிக்கலான ஏராளமான விதிகள் மற்றும் மதிப்பீடுகளுக்கு ஏற்ப தங்களைப் புதுப்பித்துக் கொள்வது அப்பணியாளர்களின் தார்மீகக் கடமை என்றும் கூறினார்.
அலுவலகப் பணியோடு காரித்தாஸ் பணியினையும் செய்து வரும் அவர்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், திறந்த மனம், எளிமை மற்றும் நன்றியுணர்வுடன் உங்கள் பணிகளை செய்யுங்கள் என்றும், தேவையிலிருக்கும் மனிதர்களோடு உரையாடவும், அவர்களது கருத்துக்கள் மற்றும் கதைகளை நட்புணர்வுடன் கேட்கவும் நேரம் ஒதுக்குங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
நட்புறவை எதிர்பார்த்து தனிமையில் காத்துக்கொண்டிருக்கும் மனிதர்களை நாம் சந்திக்கும்போது, நாம் அவர்களுக்கு அளிக்கும் ஒரு சிறு புன்னகையும், வார்த்தையும் அவர்களுக்கு நாம் அளிக்கும் ஒருவேளை உணவை விட மதிப்புமிக்கது என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்