2024 ஆம் ஆண்டு Zayed விருதிற்கான நீதிபதிகள் குழு
மெரினா ராஜ் - வத்திக்கான்
மனித உடன்பிறந்த உணர்வு நிலைக்கான 2024ஆம் ஆண்டு Zayed விருதிற்கான நீதிபதிகள் குழுவை வத்திக்கானில் டிசம்பர் 18 திங்கள் கிழமை சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன்பின் வத்திக்கான் செய்தியாளார்களுடன் 2024 ஆம் ஆண்டிற்கான் சையது விருதினை தேர்வு செய்யும் நீதிபதிகள் திருப்பீடத் தகவல் தொடர்புத்துறை அலுவலகத்தில் கலந்துரையாடினர்.
கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி (Leonardo Sandri), சையது விருதுக்குழுவின் தலைமை பொதுச் செயலரான நீதிபதி Mohamed Abdelsalam மேலும் பலர் பங்கேற்ற இக்கலந்துரையாடலில் 2024ஆம் ஆண்டிற்கான சையது விருதினைப் பெறுபவர்கள் பற்றி பகிர்ந்து கொண்டனர். விருதாளார்கள் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் நாள் அதாவது மனித உடன்பிறந்த உணர்வுநிலைக்கான பன்னாட்டு நாளின்போது அறிவிக்கப்படுவார்கள்.
மனித உடன்பிறந்த உணர்வு நிலைக்கான விழுமியங்களை முன்னேற்றுவதற்காக, பிளவுகளைக் கடந்து, தன்னலமின்றி, அயராது உழைக்கும், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை அடையாளப்படுத்தி அங்கீகரிக்கும் வகையில் இவ்விருதானது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றது.
2019ம் ஆண்டு பிப்ரவரி 4ம் நாள், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஸ்லாம் மத தலைமைக்குரு Ahmed Al-Tayeb அவர்களும் சந்தித்து இணைந்து கையெழுத்திட்ட மனிதஉடன்பிறந்த உணர்வு பற்றிய ஏடு கையெழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டுமுதல் Zayed விருது வழங்கப்பட்டு வருகின்றது.
மனிதாபிமான உதவிகளை தேவையிலிருக்கும் மக்களுக்கு தாராளமாக அளித்த, ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவனர் Sheikh Zayed bin Sultan Al Nahyan அவர்களின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள இவ்விருதின் மதிப்பானது 10 இலட்சம் அமெரிக்க டாலர்களாகும்.
2024 ஆம் ஆண்டிற்கான சையது விருதினைத் தேர்வு செய்யும் நீதிபதிகள் குழுவின் உறுப்பினர்கள் ஆப்ரிக்கா முதல் வட மற்றும் தென் அமெரிக்கா, ஆசியா முதல் ஐரோப்பா பகுதிகளைச் சார்ந்தவர்களும், பன்முகக் கலாச்சார உரையாடல், பெண்கள் உரிமைகள், பொருளாதார மேம்பாடு, சமத்துவம், கொள்கை உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சிறந்த தலைவர்களும் ஆர்வலர்களுமாவர்.
Zayed விருதாளர்கள் 2019 - 2023
2019ஆம் ஆண்டு முதன் முதலாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், எகிப்தின் அல் அசார் பல்கலைக்கழகத்தின் இஸ்லாம் பெரிய குரு Ahmed el-Tayeb அவர்களும் இவ்விருதினைப் பெற்றனர்.
2021 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலர் அந்தோணியோ கூட்டரேஸ், மற்றும் வன்முறைக்கு எதிரான மொராக்கோ-பிரெஞ்சு ஆர்வலர் Latifa Ibn Ziaten இவ்விருதினைப் பெற்றனர்.
2022ஆம் ஆண்டு ஜோர்டன் நாட்டு அரசர் Abdullah II ibn Al Hussein, அந்நாட்டு அரசி Rania Al Abdullah, FOKAL எனப்படும் ஹெய்ட்டி நாட்டு மனிதாபிமான அமைப்பு ஆகிய மூவரும் இவ்விருதினைப் பெற்றனர்.
2023ஆம் ஆண்டு, உரோம் நகரின் சான் எஜிதியோ குழு, கென்யா நாட்டின் அமைதி அமைப்பு Mama Shamsa ஆகியோர் இவ்விருதினைப் பெற்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்