தேடுதல்

திருத்தந்தையரின் உலக இறைவேண்டல் வலையமைப்பு அங்கத்தினர்களுடன் திருத்தந்தையரின் உலக இறைவேண்டல் வலையமைப்பு அங்கத்தினர்களுடன்   (ANSA)

அனைவருக்கும் செபத்தின் தேவை கட்டாயம் உள்ளது

அப்போஸ்தலிக்கப் பணிகளுக்கு முழுமையான அர்த்தத்தைக் கொடுப்பது அதனோடு இணைந்திருக்கும் செபமே. செபிப்பது என்பது ஒவ்வொரு கிறிஸ்தவனின் முதல் கடமை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

வாழ்வில் பொதுநிலையினராகவோ, திருத்தொண்டராகவோ, அருள்பணியாளராகவோ, ஆயராகவோ நன்முறையில் சேவையாற்றிடும் எவருக்கும் செபத்தின் தேவை, அதாவது பரிந்துரையின் தேவை கட்டாயம் இருக்கும் என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையரின் உலக இறைவேண்டல் வலையமைப்பு என இயேசு சபையினரால் துவக்கப்பட்ட செப அமைப்பின் அங்கத்தினர்களை ஜனவரி 26, வெள்ளிக்கிழமை காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜெபமற்ற எந்த ஒரு நடவடிக்கையும் அது ஓர் அப்போஸ்தலிக்க நடவடிக்கையாக இருந்தாலும், அது ஒரு வணிகத் தொடர்புடைய நடவடிக்கையைப் போன்றுதான் இருக்கும் என்றார்.

அப்போஸ்தலிக்கப் பணிகளுக்கு முழுமையான அர்த்தத்தைக் கொடுப்பது அதனோடு இணைந்திருக்கும் செபமே என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, செபம் மற்றும் நற்செய்தி அறிவிப்பு குறித்து புனித பேதுரு கூறிய வார்த்தைகளை மேற்கோள்காட்டி, செபிப்பது என்பது ஒவ்வொரு கிறிஸ்தவனின் முதல் கடமை என்பதையும் வலியுறுத்தினார்.

ஜெபம் என்பது இடம்பெறாதபோது, எந்த ஒரு கிறிஸ்தவ அமைப்பும் வெறும் உலகு சார்ந்த நிறுவனமாக அல்லது ஓர் அரசியல் அமைப்பாக மாறிவிடும் ஆபத்து உள்ளது என்பதையும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

கிறிஸ்தவ சமூகத்தில் செபத்தின் அவசியத்தையும், மேன்மையையும் எடுத்துரைத்துவரும் திருத்தந்தையரின் உலக இறைவேண்டல் வலையமைப்பின் அங்கத்தினர்களுக்கு தன் நன்றியையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 January 2024, 16:16