விளிம்பு நிலை மக்களுக்காக உழைக்க வேண்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
சிறிய நகராட்சிகள், உள்புறநகர்களில் வாழும் விளிம்பு நிலை மக்கள் பெரும்பாலும் சமத்துவமின்மை, வாய்ப்பின்மை மற்றும் இடைவெளிகளால் பாதிக்கப்படுகின்றனர் என்றும், உடன்வாழும் மக்கள், குழு, நிலப்பரப்பு, பொதுவான இப்பூமி என அனைத்தையும் பாதுகாக்கவேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 20 சனிக்கிழமை, வத்திக்கானின் தூய கிளமெந்தினா அறையில் ASMEL எனப்படும் துணை மற்றும் நவீனமயமாக்கலுக்கான இயக்கத்தின் உள்ளூர் அதிகாரிகள் ஏறக்குறைய 200 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதிகளுக்கு இயற்கை வளங்கள் பகிர்ந்தளிக்கப்படுவது குறைவுபடுகின்றது என்று கூறினார்.
இலாபத்திற்கு உதவாத அனைத்தும் நிராகரிக்கப்படுகின்றன என்பது மிகவும் கொடியது என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது தீயவற்றை செய்யத் தூண்டுகின்றது, விளிம்புநிலை மக்களுக்கான வாய்ப்புக்களுக்கு பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றது, குறிப்பாக முதியோர்கள் தங்களைத் தாங்களே கைவிடுபவர்கள் போல அவர்களை மாற்றுகின்றது என்றும் கூறினார்.
விளிம்பு நிலை மக்கள்
இதன் தொடர்ச்சியாக, நாட்டின் உதவிதேவையை எதிர்பார்க்கும் பகுதிகளாக, விளிம்பு நிலை மக்கள் வாழும் அப்பகுதிகள் மாறுகின்றன என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விளிம்பு நிலை மக்கள் வாழும் உள்ளார்ந்த பகுதிகளில் தான் பெரும்பாலான இயற்கைப் பாரம்பரியங்கள் கிடைக்கின்றன என்றும் சுற்றுச்சூழலுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அவை உள்ளன என்றும் கூறினார்.
குறைந்து வரும் மக்கள் தொகை இத்தகைய நிலப்பகுதிகளின் பராமரிப்பு, கவனிப்பு போன்றவற்றையும் அதன் முக்கியத்துவத்தையும் பாதிக்கின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், பெருவெள்ளம், நிலச்சரிவுகள், வறட்சி, தீ, புயல்காற்று எனும் பூமியின் அழுகுரல்கள் நிலப்பரப்பை முறையாக நாம் பாதுகாக்காமல் இருப்பதால் ஏற்படுகின்றன என்றும் எடுத்துரைத்தார்.
பூமியின் அழுகுரல்
பூமியின் அழுகுரலுக்கு செவிசாய்த்தல் என்பது ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள், போன்றவர்களின் குரலுக்கு செவிசாய்ப்பது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றது என்றும், தீர்வுகளைக் கண்டறிவதற்கு பிரிக்கப்படாதவாறு இணைக்கப்பட்டிருக்கும் அவற்றைப் பற்றி நன்கு அறிவது மிக முக்கியமானது என்றும் கூறினார்.
மக்களின் மாண்பு, நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாத்தல் போன்றவற்றிற்காக அயராது பணியாற்றி வரும் அவ்வியக்கத்தின் உறுப்பினர்களைப் பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புதிய பல பகுதிகளில் கவனம் செலுத்தி மக்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்கப்பெற உழைக்கக் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்