மன்னிப்பு மற்றும் நல்லிணக்கத்தின் திருத்தூதர்களாக விளங்கிடுங்கள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உலகில் அதிகமான கொடுமைகள் நிகழ்கின்றன, அரசியல் காரணங்களுக்காக எத்தனையோ பேர் சிறையில் வாடுகின்றனர், இதன் காரணமாகவே, அமைதிக்கான உறவு பாலங்களை உருவாக்க வேண்டுமென உங்களிடம் நான் கேட்கின்றேன் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித பிரான்சிஸ் அசிசியார் சபையினர் நடத்தும் San Francesco Patrono d'Italia என்ற மாத இதழுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில் இவ்வாறு விண்ணப்பித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உறவு பாலங்களைக் கட்டியெழுப்புவதற்கு நீங்கள் உதவவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புனித பிரான்சிஸ் ஆசிசியாரின் உருவம், அவரது விருதுவாக்கு மற்றும் இன்றைய உலகில், துறவு வாழ்வு மற்றும் மதச் சார்பற்ற நிலை சம்மந்தமாக அச்சபையினரின் பங்களிப்பு ஆகியவற்றைக் குறித்தும் இந்த நேர்காணலின் போது எடுத்துரைத்துள்ள திருத்தந்தை, மன்னிப்பு மற்றும் நல்லிணக்கத்தின் திருத்தூதர்களாக அவர்கள் விளங்கவேண்டுமென தான் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
இறுதியாக, கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொரு ஆணும் பெண்ணும் பல்வேறுவிதமான போர்களாலும், மோதல்களாலும், வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டு காயமடைந்துள்ள இவ்வுலகில், அமைதியின் பாலங்களை கட்டுபவர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறி தனது நேர்காணலை நிறைவுசெய்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்