கடவுளின் மென்மை, அருகிருப்பை வெளிப்படுத்தும் விளையாட்டு
மெரினா ராஜ் - வத்திக்கான்
அருகிருப்பை விளையாட்டு அடையாளப்படுத்துகின்றது என்றும், கடவுள் நம் அருகில் இருக்கின்றார் அவர் மென்மையானவர் இரக்கமானவர் என்பதைப் போல விளையாட்டு கடவுளின் மென்மையையும் அருகிருப்பையும் வெளிப்படுத்துகின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 13 சனிக்கிழமை வத்திக்கானின் தூய கிளமெந்தினா அறையில் வத்திக்கான் தடகளவிளையாட்டு அமைப்பினர் ஏறக்குறைய 230 பேரை அவர்களின் குடும்பத்தாருடன் சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பரந்த கலாச்சார வெளிப்பாடாக விளங்கும் விளையாட்டு உலகில், கிறிஸ்தவத்திற்கு சாட்சியாக விளையாட்டைக் காக்கும் வீரர்களுக்குத் தன் நன்றியினையும் தெரிவித்தார்.
விளையாட்டு என்பது ஒருவரின் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு வழி, அதேவேளையில் ஒன்றிணைந்த சமூகத்தைக் கட்டியெழுப்பவும், சகோதரத்துவத்தின் மதிப்பை கற்றுத் தரவும் நமக்கு உதவுகின்றது என்றும், நாம் தனித்தீவு அல்ல என்பதை வலியுறுத்தி, மொழி, மாநிலம், தோற்றம் கலாச்சாரம் முக்கியமல்ல அர்ப்பணிப்பு குறிக்கோள் மற்றும் மனித உடன்பிறந்த உறவே முக்கியம் என்பதை எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார்.
உடல், பொருளாதார மற்றும் சமூகத் திறன்களைப் பொருட்படுத்தாமல் மக்களை ஒன்றிணைக்கும் சக்தி விளையாட்டுக்கு உண்டு என்றும், தடைகளை உடைத்து பன்முகத்தன்மையைக் கொண்டாடுகின்ற மற்றும் உள்ளடக்குகின்ற கருவியாக விளையாட்டு திகழ்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
பணத்திற்கான என்றில்லாமல் விளையாட்டிற்காக என்று எண்ணி விளையாடும் வீரர்களால் விளையாட்டுக் காக்கப்படுகின்றது என்று வலியுறுத்திய திருத்தந்தை, தங்களது உடனிருப்பு, சான்றுள்ள உரையாடல், திருஅவையுடனான ஒத்துழைப்பு போன்றவற்றின் வழியாக உடனிருக்கும் அனைத்து பன்னாட்டு மற்றும் இத்தாலிய விளையாட்டு வீர்ர்களுக்கும் தன் நன்றியினைத் தெரிவித்தார்.
போர்கள் மற்றும் மோதல்களால் இருளான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு விளையாட்டானது அமைதியின் பாலமாகவும் தடைகளை உடைத்து உறவுகளை மேம்படுத்த உதவும் என்று தான் நம்புவதாகவும் எடுத்துரைத்தார்.
ஆண் பெண் விளையாட்டு வீரர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடையே மனித உடன்பிறந்த உறவு, ஒற்றுமை போன்றவற்றை மேம்படுத்தி கிறிஸ்தவ நம்பிக்கைக்கு சான்றாக விளையாட்டு விளங்குகின்றது என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உடல் ஊனமுற்ற இளைஞர்கள், அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்கள், கைதிகள், புலம்பெயர்ந்தோர், ஏழ்மையான குடும்பங்களுக்கு செய்து வரும் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், மனித மாண்புடன் அனைவருடன் இணைந்து செயல்படுவது மகிழ்வைத் தருகின்றது என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்