தேடுதல்

பிரான்ஸ் திருஅவைக்கு உதவிவரும் சமூகத்தொடர்பாளர்கள் குழுவை சந்தித்த திருத்தந்தை பிரான்ஸ் திருஅவைக்கு உதவிவரும் சமூகத்தொடர்பாளர்கள் குழுவை சந்தித்த திருத்தந்தை  (VATICAN MEDIA Divisione Foto)

சமூகத் தொடர்பாளர்களின் சான்று பகர்தல், மனவுறுதி, பரந்த பார்வை

சமூகத் தொடர்பு என்பது, மற்றவர்களுக்கு பணி செய்வதற்கான ஒரு வாய்ப்பு. நல்லவைகளை, அழகானவைகளை, உண்மையானவைகளை பகிர்வதற்கு உதவும் ஓர் இணைப்புப் பாலம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பிரான்ஸ் நாட்டு திருஅவையின் பல்வேறு அமைப்புக்களுக்கு உதவிவரும் சமூகத்தொடர்பாளர்கள் குழுவை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மறைமாவட்டங்கள், துறவு நிறுவனங்கள், கத்தோலிக்க அமைப்புக்கள், இயக்கங்கள், சமூகங்கள் மற்றும் பங்குதளங்களின் சமூகத்தொடர்ப்புப் பணிக்கு உதவி வரும் இக்குழுவிற்கு தன் நன்றியை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் மார்புச் சளியால்,  வாசிப்பதற்கு சிறிது சிரமத்தை எதிர்கொள்வதால் தான் தயாரித்து வத்த உரையை எழுத்து வடிவில் அவர்களிடம் வழங்குவதாகக் கூறினார்.

அவ்வாறு வழங்கிய செய்தியில் திருத்தந்தை, ஒரு மறைப்பணியாக இருக்கும் சமூகத்தொடர்பு என்பது, இன்றைய காலக்கட்டத்தில் உலகாயுதப்போக்குகளாலும், ஆதிக்கம், அதிகாரம், பொருளாதர வெற்றிகள் என்பவைகளாலும் மாசடைந்து நிற்கின்றது என்ற கவலையையும் வெளியிட்டுள்ளார்.

சமூகத் தொடர்பு என்பது நம் குரலால் மற்றவர்களை அடக்கி வெற்றிகொள்வதோ, பிரச்சாரமோ அல்ல எனக் கூறும் திருத்தந்தை, மௌனம் கூட சமூகத்தொடர்பாகலாம் என மேலும் அதில் தெரிவித்துள்ளார்.

சமூகத் தொடர்பு என்பது வியாபார யுக்தி அல்ல, மாறாக மற்றவர்களுக்கு பணி செய்வதற்கான ஒரு வாய்ப்பு எனக் கூறும் திருத்தந்தையின் செய்தி, நல்லவைகளை, அழகானவைகளை, உண்மையானவைகளை பகிர்வதற்கு உதவும் ஓர் இணைப்புப் பாலம் இது எனக் கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டு கத்தோலிக்க சமூகத் தொடர்பாளர்களுக்கென தயாரிக்கப்பட்ட உரையில், சான்று பகர்தல், மனவுறுதி, பரந்த பார்வை என்ற மூன்று வழிகள் குறித்தும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சமூகத்தொடர்பு என்பது ஒரு நிகழ்வுக்கு சான்று பகர்வது, மனவுறுதி என்பது தாழ்ச்சியுணர்விலும், பணியின் உறுதிப்பாட்டிலும் பிறப்பது, பரந்த பார்வை என்பது எதையும் பரந்த கண்ணோட்டத்துடன் பார்த்து மக்களை இணைப்பவைகளை கண்டுகொள்வது என மேலும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 January 2024, 15:24