மனிதகுலப் பேரழிவான போர் நிறுத்தப்படவேண்டும்

போரை நிறுத்த விரும்பும் மக்களின் கூக்குரலுக்கு செவிசாய்த்து, மக்களுக்கு பேரழிவையும், மனிதகுலத்திற்குத் தோல்வியையும் தரும் போர் நிறுத்தப்பட வேண்டும்

மெரினா ராஜ் - வத்திக்கான்  

அழிக்கும் ஆயுதங்கள், மனிதநேயம் மற்றும் மனிதவளர்ச்சிக்கான கருவிகளாக மாற வேண்டும் என்றும், அமைதி என்பது ஒரு பாதை என்பதை உணர்ந்து மனித குலத்திற்குப் பேரழிவையும் தோல்வியையும் தரும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 28 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செபஉரையின் இறுதியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக மியான்மார் மக்களின் புன்னகைக்குப் பதிலாக துன்பத்தினால் ஏற்படும் அழுகையும், ஆயுதங்களின் இரைச்சலும் அதிகரித்துள்ளன என்றும் எடுத்துரைத்தார்.

மியான்மார் மக்கள் நல்லிணக்கத்தின் இலக்கை அடையும் வகையில், உரையாடல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், புரிந்துணர்வை அணிந்து கொள்ளவும் தொடர்புடைய அனைவருக்கும் தான் வேண்டுகோள் விடுப்பதாகவும், மனிதாபிமான உதவிகள் ஒவ்வொருவரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

மத்திய கிழக்கு, பாலஸ்தீன், இஸ்ரயேல், உக்ரைன் போன்ற நாடுகளில் நடக்கும் போரினை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், போரினால் துன்புறும் மக்கள் மதிக்கப்படவும், அவர்களின் அமைதிக்கான கூக்குரலுக்கு செவிசாய்க்கவும் வலியுறுத்தினார்.

மேலும், வன்முறையால் மக்கள் மிகவும் சோர்வடைந்துள்ளனர் என்றும்,  போரை நிறுத்த விரும்பும் மக்களின் கூக்குரலுக்கு செவிசாய்த்து, மக்களுக்கு பேரழிவையும், மனிதகுலத்திற்குத் தோல்வியையும் தரும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கடந்த வாரம் ஹைட்டியில் கடத்தப்பட்ட அருள்சகோதரிகள் மற்றும் ஏனையோர் விடுவிக்கப்பட்டதை அறிந்து தான் மகிழ்ந்ததாக தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடத்தப்பட்ட எல்லா மக்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், எல்லாவிதமான வன்முறைகளுக்கும் முடிவு கட்டப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் அமைதியான வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை ஒவ்வொருவரும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள்,  அமைதி வளர்ச்சிக்கு பன்னாட்டு சமூகத்தின் புதுப்பிக்கப்பட்ட ஆதரவு தேவைப்படுகிறது என்றும் கூறினார்.

மேலும் இஸ்தான்புல் தூய த்ரபெரிஸ் மரியா ஆலயத்தில் ஏற்பட்ட தாக்குதலினால் இறந்தவர், மற்றும் காயமடைந்தவர்களுக்குத் தனது ஆறுதலையும் ஆன்மிக நெருக்கத்தையும் வெளிப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக தொழுநோயாளர்கள் நாளான இன்று, ஏழை மக்களை அதிகமாக பாதிக்கின்ற மற்றும் சமூகத்தால் வெறுத்து ஒதுக்கப்படுகின்ற தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து செபிப்பதாகவும், தொழுநோயாளர்கள் வாழ்க்கை மற்றும் மீட்புக்காகப் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரையும் தான் வாழ்த்துவதாகவும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2024, 13:24