உண்மைக்கான மெய்யான ஏக்கத்திற்கு முதலிடம் கொடுங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பின் அங்கத்தினர்களை வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞானம், மற்றும் மனிதகுலத்தை வளமாக்கி வளர்க்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து ஆற்றுங்கள் என அவர்களிடம் அழைப்புவிடுத்தார்.
கத்தோலிக்கப் பல்கலைக் கழகங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பின் அங்கத்தினர்களை ஜனவரி 19, வெள்ளிக்கிழமையன்று சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மைக்கான மெய்யான ஏக்கத்திற்கு முதலிடம் கொடுத்து, சமூகப்பிரிவினைச் சுவர்களையும் அச்சத்தையும் எதிர்த்து, மறுமலர்ச்சிக் கல்விக்கு அர்ப்பணித்து, நவீன கால பிரச்சனைகளை ஆராய்ந்து செயல்படவேண்டும் என அழைப்புவிடுத்தார்.
கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களின் உலக கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் நூறாமாண்டு சிறப்பிக்கப்படுவது குறித்தும் தன் செப உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் சிறப்புடன் செயலாற்றுவதற்கு உதவும் இரு கூறுகள் குறித்து எடுத்துரைத்தார்.
இவ்வுலகில் இன்று ஏறக்குறைய இரண்டாயிரம் கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் செயலாற்றிவரும் நிலையில், அவைகளுக்கிடையே ஒரு வலைப்பின்னலை உருவாக்கி ஒத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை முதல் கூறாக எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மக்களிடையே ஒப்புரவு, அமைதி மற்றும் பிறரன்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுத்து நடத்துவதை இரண்டாவது கூறாகக் காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
.இத்தகைய ஒரு நோக்கத்தோடு, தன் அனைத்து நடவடிக்கைகளிலும், பல்கலைக்கழகங்கள் அமைதி கலாச்சாரத்தைக் கட்டியெழுப்ப முயலவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்