ஈரானில் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அனுதாபம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ஈரான் நாட்டில் இரு குண்டுவெடித் தாக்குதலில் இடம்பெற்ற உயிரிழப்புகள் குறித்த திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தி அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால் ஈரான் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ள இரங்கல் தந்தியில், ஈரானின் கெர்மான் நகரில் புதனன்று இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் இடம்பெற்ற உயிரிழப்புக்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கான செபவுறுதியை திருத்தந்தை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குண்டுவெடிப்புக்களால் காயமடைந்துள்ள அனைவருடன் திருத்தந்தையின் ஆன்மீக நெருக்கத்தை வெளியிடுவதாகவும், ஈரான் நாட்டின் அனைத்து மக்களுக்கும் இறைவனின் ஞானம் மற்றும் அமைதியின் ஆசீரை இறைஞ்சுவதாகவும் அத்தந்திச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி 3ஆம் தேதி, புதன்கிழமையன்று ஈரானின் Kerman நகரில் முன்னாள் இராணுவ தளபதி Qasem Soleimani அவர்களின் கல்லறை அருகே இடம்பெற்ற இரண்டு வெடிகுண்டு விபத்துக்களில் ஏறக்குறைய 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 280 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
அமரிக்க ஐக்கிய நாட்டின் விமான வழி குண்டுவீச்சில் உயிரிழந்த ஈரான் இராணுவ தளபதி சுலைமானியின் நான்காவது ஆண்டு துக்க தினமன்று இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்