கிறிஸ்தவ ஒன்றிப்புக்காக செபிப்பது ஒரு புனிதமானக் கடமை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான பயணம் இறைவேண்டலில் தன் ஆதாரத்தைக் கொண்டுள்ளது என கிறிஸ்தவ ஒன்றிப்பு வார இறுதி நாள் வழிபாட்டில் உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகரின் திருத்தூதர் பவுல் பெருங்கோவிலில் ஜனவரி 25, வியாழனன்று இடம்பெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிறைவு வழிபாட்டில் ஏனைய கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களுடன் கலந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரிவினைகளுக்கான சாத்தானின் சோதனைகளை நாம் இறைவேண்டல் மற்றும் தன்னலமற்ற செவைகள் வழியாக வெற்றிகொள்ள வேண்டும் என்றார்.
பிரதிபலன் எதிர்பாராத சேவையாக உருவாகும் அன்பும், கிறிஸ்துவால் கற்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட அன்பும் நம் அனைவரையும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருச்சட்ட அறிஞர் ஒருவர், நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்று கேட்ட கேள்வியின்போது, கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வதும் அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வதும் குறித்து பேசப்பட்டு, இயேசுவால் நல்ல சமாரியர் உவமை எடுத்துரைக்கப்பட்டதை (லூக் 10:25-37) சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
கடந்தகால தவறுகளைச் சுட்டிக்காட்ட விரும்பாத அன்பு, இறைவனின் பெயரால் நம் மத அமைப்பு முறைகளுக்குள் நம் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் பாதுகாப்பை வழங்க முன்வரும்போது அது நம்மை ஒன்றிணைப்பதாக இருக்கும் எனவும் திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
இவ்வுலகில் நம் அயலான் யார் எனக் கேட்பதற்கு முன்னர், யாருக்கு நாம் அயலானாக இருக்கிறோம் என்பதையும், நம் தனிப்பட்ட மற்றும் சமூக ஆன்மீகம், தன்னலத்திலா அல்லது மனிதகுல உடன்பிறந்த நிலையிலா தன் ஆதாரத்தைக் கொண்டுள்ளது என்பதையும் சிந்திக்கவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
கடவுளை நம் விலைமதிப்பற்ற புதையலாக நாம் கண்டுகோண்டோமானால் நம் அனைத்து நடவடிக்கைகளும் அவரின் விருப்பதை, ஆவலை நிறைவேற்றுவதாக மாறும் எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றிப்பை நோக்கிய நம் பயணத்தில் நாம் தூய பவுலைப்போல் இறைவனை நம் இதயங்களுக்குள் அனுமதித்து நாம் மனமாற்றம் பெற அவரின் தூண்டுதலைப் பெறவேண்டும் என்றார்.
ஒன்றிணைந்து பயணித்தலும், ஒன்றிணைந்து பணியாற்றுதலுமாக இருக்கும் நம் பாதையில் ஜெபத்திற்கு முதன்மை இடம் வழங்க வேண்டும் என்ற திருத்தந்தை, கடவுளையும் அடுத்திருப்பவரையும் அன்புகூரும்போது, நாம் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்பவர்களாக மாறுகிறோம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
கிறிஸ்தவ ஒன்றிப்புக்காக செபிக்கவேண்டியது ஒரு புனிதமானக் கடமை, ஏனெனில் இயேசுவும் ஒன்றிப்புக்காக தந்தையாம் இறைவனிடம் மன்றாடினார் என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் போர்கள் முடிவுக்கு வரவேண்டும் என்பதற்காக நாம் செபிப்போம், குறிப்பாக உக்ரைன் மற்றும் புனித பூமியில் போர் நிறுத்தப்பட ஒன்றிணந்து செபிக்க மறவோம் என அழைப்புவிடுத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்