தேடுதல்

இறைவனை ஆராதிக்கும் இதயம் கொண்டவர்களாக வாழ்வோம்

எப்போதும் அன்பு மற்றும் ஒளியைத் தேடுபவர்களாக நாம் இருக்க வேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

பெத்லகேமில் பிறந்த குழந்தை இயேசுவைக் காண, கிழக்கிலிருந்து வந்த மூன்று ஞானியர்களின் கண்கள் வானத்தை நோக்கியவண்ணம் இருந்தன என்றும் கால்கள் பூமியில் நடக்கின்றன, அவர்கள் இதயமோ இறைவனை வணங்கி ஆராதிக்கின்றன என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 6 சனிக்கிழமை திருக்காட்சிப் பெருவிழாவை முன்னிட்டு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் கர்தினால்கள் ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்களுடன் இணைந்து கூட்டுத்திருப்பலியைத் தலைமையேற்று நடத்தி மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வானத்தை நோக்கிய கண்கள்

இயேசுவைக் காணவேண்டும் என்ற ஏக்கத்தில் வாழ்ந்து வந்த ஞானிகள் வானத்தில் தோன்றிய நட்சத்திரங்களால் ஈர்க்கப்படுகின்றார்கள் என்றும், தலையை உயர்த்தி, ஒளிரும் புதிய வாழ்க்கைக்காக, மீட்பை அருளும் ஒளி நிறைந்த வாழ்க்கைக்காக காத்திருக்கின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

அவர்களது நம்பிக்கைக்கேற்ப ஒளிரும் விண்மீன் வானத்தில் தோன்றி, அவர்களுக்கு வழிகாட்டியது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், உலக காரியங்கள் மற்றும் தன்னலச் செயல்பாடுகளில் நம்மை நாமே குறுக்கிச் செயல்படும்போது, துன்பத்தை அனுபவிக்கின்றோம் என்றும் அதற்கு மாறாக தலை நிமிர்ந்து செயல்படும்போது, மீட்பின் ஒளியைக் கண்டுகொள்கின்றோம் என்றும் கூறினார்.

எப்போதும் அன்பு மற்றும் ஒளியைத் தேடுபவர்களாக நாம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இயேசுவை சந்திக்க சென்ற ஞானியர் வானத்திலிருந்தும் கடவுளிடமிருந்தும் தங்களுக்கு உதவி வரும் என்று நம்பினார்கள் என்றும், நமது வாழ்க்கைப் பயணத்தில் கடவுளின் நட்புறவு, அன்பு, ஒளி தரும் இறைவார்த்தை நமக்கு இருளில் வழிகாட்டும் விண்மீன் என்பதை உணர்ந்து வாழவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பூமியில் நடக்கும் கால்கள்

யூதரின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே என்று கேட்டுக்கொண்டு எருசலேம் நோக்கிச் சென்ற ஞானியர், விண்மீன் ஒளியில் பூமியில் நடந்தனர் என்றும், தலையை வானத்தை நோக்கி உயர்த்தி இருந்தாலும், அவர்கள் கால்கள் பூமியில் மனிதராகப் பிறந்திருக்கின்ற இயேசுவைத் தேடி சென்றன என்றும் கூறினார்.

கடவுள் மனித வடிவில் ஒரு குழந்தையாகப் பிறந்துள்ளார் என்பதையும் எல்லையற்ற பெரியவரான கடவுள் சிறியவராக எளியவராக தன்னை வெளிப்படுத்தியுள்ளதை காண ஞானியர் விரைந்து சென்றார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பூமியில் நடக்கும் பாதங்கள் நம்பிக்கையின் கொடை என்று கூறிய திருத்தந்தை அவர்கள், உலகின் தெருக்களில் நற்செய்தியின் சாட்சிகளாக நடப்பதற்கும், நமது வாழ்வில் ஒளியேற்ற மட்டுமன்று, இருளில் இருக்கும் ஒவ்வொரு மக்களின் இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளியேற்றவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் கூறினார்.

குழந்தை இயேசுவைத் தேடிய ஞானியர் மனித உருவில் அவரைக் கண்டுகொண்டது போல, நாமும் நம்மத்தியில் வாழும் மனிதர்களில் இயேசுவைக் காணவேண்டும் என்றும், குறிப்பாக ஏழை மக்களில் இயேசுவைக் காண்பது நமது நம்பிக்கை வாழ்க்கைக்கு மிகவும் உதவுகின்றது, மகிழ்ச்சியைத் தருகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

கடவுளை வணங்கி ஆராதித்த இதயம்

ஞானியர் சுற்றுலாப் பயணிகள் போன்றோ, இலக்கற்ற பயணிகள் போன்றோ இல்லாமல் இதயத்தால் கடவுளை வணங்கி ஆராதித்தனர் என்றும், தங்களிடமிருந்த பொருள்களை அவருக்குப் பரிசாக அளித்து அவரை ஆராதித்து வணங்கினர் என்றும் கூறினார் திருத்தந்தை.

பொன், தூபம், வெள்ளைப்போளத்தை பரிசாக குழந்தை இயேசுவுக்கு அளித்த ஞானியர், இயேசு அரசர் என்பதை உணர்த்த பொன்னையும், இறைவன் என்பதை உணர்த்த தூபத்தையும், அவரது மரணத்தை அறிக்கையிட வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக அளித்தனர் என்றும் கூறினார்.

நாம் இயேசுவை நமது கடவுளாகவும் ஆண்டவராகவும் அங்கீகரித்து, நம்மிடம் உள்ளவற்றை அவருக்கு வழங்குகிறோம் என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக நாம், நாமாகவே இருக்கிறோம் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஞானியரைப் போல கண்களை வானோக்கி உயர்த்தவும், கால்கள் எளியவர்களை நோக்கி நடக்கவும், இதயம் இறைவனை ஆராதிக்கவும், கிறிஸ்துவின் ஒளியை அனைவருக்கும் கொண்டு வருபவர்களாக நாம் இருப்போம் என்றும் கூறினார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 January 2024, 12:20