தேடுதல்

ஏழ்மைக்குச் சான்றுபகரும் திருக்குடும்பம்!

இயேசு துன்பங்களை ஒதுக்கவில்லை, மாறாக, துன்பத்தை ஏற்று அதனை வாழ்ந்து காட்டுவதில் கைதேர்ந்த ஒரு குடும்பத்தை தேர்வு செய்து அதில் வாழ்ந்தார் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

குழந்தை இயேசுவை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க எருசலேம் ஆலயத்திற்குக் கொண்டு வரும் அன்னை மரியாவும் யோசேப்பும், தாழ்மையும் எளிமையும் நிறைந்த காணிக்கைகளைக்  கொணர்ந்தது அவர்களின் ஏழ்மை நிறைந்த வாழ்வுக்குச் சான்றாக அமைகின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 31, இஞ்ஞாயிறன்று, அன்னையாம் திருஅவை, திருக்குடும்ப பெருவிழாவைச் சிறப்பித்த வேளை, வத்திகானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு  நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

இன்றையத் திருக்கும்ப பெருவிழா நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் (காண்க லூக் 2:22-40) தனது மூவேளை செபவுரை சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை,  ஏழ்மையைச் சுமந்து வந்த திருக்குடும்பம், துயரத்தைப் பெற்றுத் திரும்புகிறது என்றும், சுலபமான காரியங்களைப் பெற்று மகிழ்வதற்குப் பதிலாக, இது தடைகளை எதிர்கொள்வதுபோன்று தோன்றுகிறது என்றும், இன்னலிலிருந்து விடுபடுவதற்குப் பதிலாகத் துயரத்தில் மூழ்குகின்றது என்றும் எடுத்துக்காட்டினார்.

பிரச்சனைகளுக்கு அப்பாற்பட்டு நிற்பவர்தான் கடவுள் என்று நாம் அடிக்கடி கற்பனை செய்துகொள்ளும் வேளை, மனுவுருவெடுத்தலின் வழியாக, மனிதரைப் போன்று பிரச்சனைகள் நிறைந்த வாழ்வை வாழ்வதற்காகக் கடவுள் நம்மிடையே வந்தார் என்றும் விளக்கினார் திருத்தந்தை.

ஒரு சாதாரண குடும்பத்தின் தாய் தந்தையருக்கு மகனாக இயேசு வாழ்ந்தார் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு அவர் தனது பெரும்பாலான நேரத்தை வளர்ச்சியிலும் கற்றலிலும் அமைதியிலும் கழித்தார் என்றும் உரைத்தார்.

இயேசு துன்பங்களை ஒதுக்கவில்லை, மாறாக, துன்பத்தை ஏற்று அதனை வாழ்ந்து காட்டுவதில் கைதேர்ந்த ஒரு குடும்பத்தை தேர்வு செய்து அதில் அவர் வாழ்ந்தார் என்றும், இதன் வழியாகக் குடும்பங்கள் அனுவிக்கும் துயரங்கள் குறித்தும், எக்காரணத்திற்காக அவைகள் துயருறுகின்றன என்பது குறித்தும் இயேசு நன்கு அறிவார் என்றும் கூறினார் திருத்தந்தை.

தாயும் தந்தையும் வியப்புற்றனர்

குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர் (காண்க லூக் 2:33) என்று நாம் இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம், அப்படியென்றால், வியக்க வைக்கும் அவர்களின் திறன் ஒரு குடும்பமாக முன்னேறுவதற்கான இரகசியமாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

ஒருவர் தனது மனைவியை எப்படி வியப்படையச் செய்வது என்றும், பின்னர் வாழ்விலும், குழந்தைகளிலும் நிகழும் அதிசயங்களைக் கண்டு வியப்படைவது, மற்றும், தாத்தா பாட்டிகளின் ஞானம் மற்றும் அமைதியைக் கண்டு வியப்பதும் கூட நல்லது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

குடும்பத்தின் அரசியான அன்னை மரியா,  ஒவ்வொரு நாளும் நல்லதைக் கண்டு வியப்படையவும், நமக்கு அருகில் இருப்பவர்களின் முகங்களில் அதை எப்படிப் பார்ப்பது என்பதை அறிந்துகொள்ளவும் நமக்கு உதவுவாராக! என்றும் கூறி, திருப்பயணிகளுக்குத் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 January 2024, 14:21