சீரோ மலபாரின் புதிய பேராயர் பதவியை உறுதி செய்தார் திருத்தந்தை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - ;வத்திக்கான்
சீரோமலபார் வழிபாட்டுமுறை திருஅவையின் தலைவரும், எர்ணாகுளம்-அங்கமாலி உயர்மறைமாவட்டத்தின் பேராயருமான, கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்கள் பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, Shamshabad-இன் ஆயர் Raphael Thattil அவர்கள் அதன் புதிய பேராயராக நியமனம் செய்யப்பட்டதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் உள்ள புனித தோமையார் மலையில் கூடிய சீரோ மலபார் திருஅவையின் ஆயர் பேரவையில் Raphael Thattil அவர்கள் பேராயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கீழைத் திருஅவைகளின் திருஅவைச் சட்டத்தின் (CCEO) சட்ட என் 153-ன்படி இத்தேர்வை உறுதிப்படுத்தினார் திருத்தந்தை.
தனது தேர்வை உறுதிப்படுத்துமாறு ஆயர் Raphael அவர்கள் திருத்தந்தைக்கு எழுதிய கடிதத்திற்குப் பதிலளித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "நீங்கள் கோரிய உறுதிப்படுத்தலை நான் மனப்பூர்வமாக வழங்குகிறேன் என்றும், நமது ஆண்டவரும் கடவுளுமான இயேசு கிறிஸ்துவில் எனது சகோதர நல்வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கின்றேன் என்றும் கூறியுள்ளார்.
புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆயர் Raphael அவர்கள், தனது முன்னோடியான கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்களைப் பின்பற்றி, தனது பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்ட மந்தைக்குத் தாராளமான மற்றும் பலனளிக்கும் மேய்ப்புப் பணியாற்றவும், ஏழைகளையும் மிகவும் தேவையில் இருப்போரையும் நினைவில் கொள்ளுமாறும் அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.
சீரோ மலபார் திருஅவையின் ஒன்றிப்பு, நம்பிக்கை மற்றும் பணியை தூய ஆவியானவர் வளர்ப்பாராக! இதன் காரணமாக, அத்திருஅவை பேராயர் ரஃபேல் அவர்களின் தந்தைவழி வழிகாட்டுதலின் கீழ் வளர்ந்து செழிக்கட்டும் என்றும் தொடர்ந்து அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
மேலும் திருத்தந்தையின் இந்த அறிவிப்புடன், தற்போது, எர்ணாகுளம்-அங்கமாலி சீரோமலபார் உயர்மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகச் செயல்படும் போஸ்கோ புத்தூர் அவர்கள் மாற்று ஏற்பாடு செய்யும்வரை, தனது பணியைத் தொடர்வார் என்றும் வத்திக்கான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆயர் Raphael Thattil அவர்கள் வாழ்க்கை
ஆயர் Raphael அவர்கள், 1956-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி இந்தியாவின் திருச்சூரில் (திருச்சூரில்) பிறந்தார். வடவத்தூரிலுள்ள குருமடத்தில் பயின்ற பிறகு, உரோமையிலுள்ள பாப்பிறை ஓரியண்டல் கல்லூரியில் கீழைத் திருஅவைச் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றார். மலையாளம் மற்றும் ஆங்கிலம் மொழிகளைச் சரளமாகப் பேசும் இவருக்கு இத்தாலி மற்றும் ஜெர்மன் மொழிகளும் தெரியும்.
இவர் 21.12.1980 அன்று, அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். 18.01 2010 அன்று, சீரோ-மலபார் திருஅவையின் ஆயர் பேரவையால் திருச்சூரின் துணை ஆயராகத் தேர்வுசெய்யப்பட்டார். 10.04.2010 அன்று, ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 23.12.2013 அன்று, இந்தியாவில் வாழும் சீரோ-மலபார் திருஅவையின் நம்பிக்கையாளர்களுக்கு அவர் திருத்தந்தையின் பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.
10.10.2017 அன்று Shamshabad புதிய மறைமாவட்டம் நிறுவப்பட்டு, அதன் முதல் ஆயராக நியமிக்கப்பட்டார். 09.01.2024 அன்று, சீரோ-மலபார் திருஅவையின் பேராயராகத் தேர்வு செய்யப்பட்டார். அதே நாளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதன் ஆயர் பேரவையின் தேர்வை உறுதிப்படுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்