திருஅவைப் பணியினை ஏற்க உறுதியளிக்கும் உறுதிப்பூசுதல் அருளடையாளம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
உறுதிப்பூசுதல் திருவருளடையாளம் வழியாக, இயேசுவையும் அவருடைய நற்செய்தியையும் அறிவிக்கும் திருஅவைப் பணியினை நாம் ஏற்கின்றோம் என்றும் நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட அர்ப்பணிப்பாக இப்பணியை ஏற்றுக்கொள்ளும் நாம் பார்வையாளர்களாக அல்லாது நாம் செய்யும் பணியின் மிகமுக்கியமானவர்களாக மாறுகின்றோம் என்றும் கூறினார்.
சனவரி 27 சனிக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் பாரி மறைமாவட்டத்தைச் சார்ந்த உறுதிப்பூசுதல் திருவருளடையாளம் பெற இருக்கும் சிறார், மறைக்கல்வி ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஞானப்பெற்றோர்கள் என ஏறக்குறைய 7200 பேரை சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் ஒவ்வொருவரும் திருமுழுக்கு பெற்ற நாளினை மறந்துவிடக்கூடாது மாறாகக் கட்டாயம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், இரண்டாவது பிறந்த நாளாக அதனைக் கருதி ஒவ்வொரு ஆண்டும் நாம் சிறப்பித்துக் கொண்டாட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருமுழுக்கு அருளடையாளம் பெற்ற நாளன்று, நாம் கிறிஸ்தவ வாழ்விற்குள் பிறந்தோம், கிறிஸ்துவுக்குள் பிறந்தோம். எனவே அந்த நாள் மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தகைய வாழ்வானது நீடித்து நிலைக்கக் கூடியது, முடிவில்லாதது என்றும் திருஅவை என்னும் பெரிய குடும்பத்தில் பிறந்தோம் நம்மை விட்டு அகலாத, எப்போதும் நம்மோடு இருக்கும் தூய ஆவியானவரைப் பெற்றோம் என்றும் கூறினார்.
திருமுழுக்கு அருளடையாளம் எவ்வளவு பெரிய கொடை என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், உறுதிப்பூசுதல் அருளடையாளத்தினால் தூய ஆவியாரால் நாம் இன்னும் அதிகமதிகமாக உறுதிப்படுத்தப்பட்டு வலிமையடைகின்றோம் என்றும், அவரது கொடைகளால் புதுப்பிக்கப்படுகின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.
மிலானைச் சார்ந்த கார்லோ அக்குத்தீஸ் என்னும் 15 வயது இளம்அருளாளரை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் மீது அளவற்ற அன்பு, இணையத்தை இறைப்பணிக்கு செலவழித்து நற்செய்தி அறிவித்தல், திருநற்கருணை பக்தி போன்றவற்றை சிறப்பாகச் செய்த அக்குத்தீஸ் போன்று ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
செபம், சான்று வாழ்வு, இரக்கம் என்னும் மூன்று பண்புகளில் சிறந்து விளங்க சிறாரை வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கடவுள் நம்மை அதிகமதிகமாக அன்பு செய்கின்றார் அவர் நமக்காக எப்போதும் காத்துக்கொண்டிருக்கின்றார் என்ற வரிகளை உறுதிப்பூசுதல் பெற உள்ள குழந்தைகளை பலமுறை சத்தமாகக் கூறப்பணித்தார்.
இறுதியாக, இயேசுவை சந்திக்க நமக்கு உதவும் அன்னை மரியாளின் உதவியை நாடி செபிப்போம் என்று கூறி அருள் நிறைந்த மரியே என்னும் செபத்தை ஒன்றிணைந்து கூறக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை அவர்கள், தன் சிறப்பு ஆசீரை அவர்களுக்கு அளித்து வாழ்த்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்