நீங்கள் உதவ வேண்டியர்கள், உங்கள் அருகிலேயே இருக்கின்றனர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உங்கள் ஒவ்வொரு சந்திப்பிலும், உங்கள் சகோதரர்களிடம் ஆண்டவராகிய இயேசுவின் பிரசன்னத்தைக் கண்டறியவும், இரக்கமுள்ள கடவுளின் பிரசன்னத்தை வெளிக் காட்டவும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
ஜனவரி 4, இவ்வியாழனன்று, Fraternité Missionaire des Cités என்ற அமைப்பினரைத் திருப்பீடத்தில் சந்தித்தவேளை, இவ்வாறு வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்கள் சைகைகள் மற்றும், எளிய வார்த்தைகள் வழியாகக் கடவுள், தன்னை வெளிப்படுத்தவும் செயல்படவும் விரும்புகிறார் என்றும் தெரிவித்தார்.
நாம் இன்னும் கிறிஸ்து பிறப்பு விழாக் கொண்டாட்ட நாட்களில் மூழ்கியிருப்பதால், குடிலைக் குறித்துச் சிந்திப்போம் என அவர்களுக்கு அழைப்புவிடுத்த திருத்தந்தை, குடிலில் பிறந்துள்ள குழந்தை இயேசுவைச் சந்திக்க வரும் இடையர்கள் சமூகத்தின் கடைநிலையில் வாழ்ந்தவர்கள் என்றாலும், மீட்பின் நற்செய்தி முதலில் அவர்களுக்குதான் அறிவிக்கப்படுகிறது என்றும், அவர்கள் ஏழைகளாக இருந்தாலும், அவர்களின் இதயம் கடவுளைச் சந்திக்கத் தாயார் நிலையில் இருக்கிறது என்றும் ஏடுத்துக்காட்டினார்.
நீங்கள் சேவையாற்றுவதற்கான இடங்களைக் கண்டறிய உங்கள் நகரங்களின் மையப்பகுதிக்கு வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை, மாறாக, அவை பெரும்பாலும் உங்கள் அருகில், கைக்கெட்டும் தூரத்தில், தெரு முனையில் இருக்கின்றது என்பதைக் கண்டறியுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
எனவே, உங்கள் சகோதரர் சகோதரிகளின் அன்றாட வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வதற்காக உங்களின் வசதியான சூழலைவிட்டு விட்டு வெளியே வர நீங்கள் அஞ்ச வேண்டாம் என்றும், நீங்கள் சந்திக்கவிருக்கும் அம்மக்களில் பலரும் கூட, மனம் திறந்து நற்செய்திக்காக தங்களை அறியாமலேயே காத்திருக்கிறார்கள் என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
திறந்த இதயங்கள், கைகள், மற்றும் காதுகளுடன், உங்களுக்கு அடுத்திருப்போருக்கு மத்தியில் உடன்பிறந்த உறவுடன் தாராள மனமும், நேர்மையான வரவேற்பும் கொண்டு வாழ உங்களை அழைக்கிறேன் என்று உரைத்த திருத்தந்தை, உடன்பிறந்த உறவு என்பது அமைதியைச் சுற்றுப்புறங்களுக்குப் பரவச் செய்யும் புளிப்பு மாவு போன்றது என்றும், அது ஒவ்வொருவரும் அவர் இருக்கும் இடத்திலும், அவர் இருக்கும் நிலையிலும், வரவேற்கப்படுவதை உணர அனுமதிக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்