தேடுதல்

DIALOP என்ற கூட்டமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் DIALOP என்ற கூட்டமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

ஊழல், அதிகார முறைகேடு மற்றும் சட்டவிரோதச் செயல்களை எதிர்ப்போம்!

நேர்மையில் மட்டுமே நலமான உறவுகளை ஏற்படுத்த முடியும் என்பதுமட்டுமன்றி, சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் நம்பிக்கையுடனும் திறமையுடனும் ஒத்துழைக்க முடியும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பின்வாங்காதீர்கள், கைவிடாதீர்கள், ஒரு சிறந்த உலகத்தைக் கனவு காண்பதை நிறுத்தாதீர்கள் என்றும், இன்று, போர்கள் மற்றும் நேரெதிர்க் கருத்து முரண்பாடுகளால் பிளவுபட்ட உலகில், கனவு காணும் திறனை இழக்கும் ஆபத்தில் இருக்கின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜனவரி 10, இப்புதனன்று, DIALOP என்ற கூட்டமைப்பினரைத் திருப்பீடத்தில் சந்தித்த வேளை, அவர்களிடம் இவ்வாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தடையை உடைக்கும் வலிமை, பலவீனமானவர்கள் மீது கவனம், சட்டத்தை மேம்படுத்துதல் ஆகிய மூன்று தலைப்புகளின் கீழ் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

தடையை உடைக்கும் வலிமை

தடைகளை உடைத்து, உரையாடலில், புதிய வழிகளைத் திறக்க உங்களுக்கு வலிமை வேண்டும் என்றும், மோதல்கள் மற்றும் பிளவுகளால் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டுள்ள இக்காலத்தில், இதனை மாற்ற உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைக் குறித்துச் சிந்திக்க நீங்கள் மறக்க வேண்டாம் என்றும் அவர்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

பிரித்தாளும் கடுமையான அணுகுமுறைகளுக்கு எதிராக, அரசியல், சமூக மற்றும் மத நிலைகளில், யாரையும் தவிர்க்காமல் அனைவருக்கும் நீங்கள் திறந்த மனதுடன் செவிமடுக்க வேண்டும் என்றும், இதன் காரணமாக நீங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பையும், அதன் உறுதியான தனித்தன்மையில், செயல்முறைகளில் சாதகமாக வரவேற்கலாம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

பலவீனமானவர்கள்மீது கவனம்

உண்மையிலேயே மனிதருக்கு சேவை செய்யும் கொள்கையானது, நிதி மற்றும் சந்தை வழிமுறைகளால் ஆணையிடப்படுவதை அனுமதிக்க முடியாது என்று வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை, ஒருங்கிணைவு என்பது ஒரு தார்மீக நற்பண்பு என்பதுடன், நீதிக்கான ஒரு கோரிக்கையாகவும் இருக்கின்றது என்றும், இது, அநீதியான அமைப்புகளின் சிதைவுகளை சரிசெய்யவும் அதன் நோக்கங்களைத் தூய்மைப்படுத்தவும் தேவைப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் இதன் காரணமாகவே, இத்துறையில் ஈடுபடுவோரை 'சமூகக் கவிஞர்கள்' என்று நான் அழைக்க விரும்புகிறேன், ஏனென்றால் கவிதை என்பது படைப்பாற்றல், இங்குப் படைப்பாற்றல் என்பது, சமூகத்தின் சேவைக்காக அமையட்டும், அப்போதுதான் அது மனித மாண்பும் உடன்பிறந்த உறவும் கொண்டதாக இருக்கும் என்றும் உரைத்த திருத்தந்தை, கவிதை வடிக்க அஞ்சவேண்டாம், காரணம், கவிதையும் ஒரு படைப்பாற்றல்தான் என்றும், கனவு காணும் இந்தத் திறனை நாம் மறந்து விடக்கூடாது என்றும் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

சட்டத்தை மேம்படுத்துதல்

சட்டத்தை மேம்படுத்துதல் என்பது, நாம் இதுவரை கூறியிருக்கின்ற ஊழல், அதிகார முறைகேடு மற்றும் சட்டவிரோதம் ஆகியவற்றின் கேடுகளை எதிர்த்துப் போராடுவதற்கான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, நேர்மையில் மட்டுமே நலமான உறவுகளை ஏற்படுத்த முடியும் என்பதுமட்டுமன்றி, சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதில் நம்பிக்கையுடனும் திறமையுடனும் ஒத்துழைக்க முடியும் என்றும் விளக்கினார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 January 2024, 14:45