பிறரன்பு மற்றும் உண்மையின் பாதையில் பேச்சுவார்த்தைகள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
வானுலகில் ஒன்றித்துச் செயல்படும் புனிதர்கள் மற்றும் மறைசாட்சிகளின் நல் ஊக்கம் பெற்றவர்களாக, அமைதிக்கான ஏக்கத்தைப் புரிந்துகொண்டவர்களாக, ஒன்றிப்பின் பணிக்கு இணைந்து செபித்துப் பணியாற்றுவோம் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கத்தோலிக்கத் திருஅவைக்கும் கீழைவழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளுக்கும் இடையே இறையியல் பேச்சுவார்த்தைகளுக்கான உலக அவையின் அங்கத்தினர்களை வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை, இவ்வவையின் இருபதாம் ஆண்டுக் கொண்டாட்டத்தின்போது அவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், இருதரப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் பிறரன்பு மற்றும் உண்மையின் பாதையில் இடம்பெறுவதாகவும் எடுத்துரைத்தார்.
துவக்க காலத்திலிருந்தே இவ்விரு தரப்பினருக்கும் இடையே இடம்பெற்றுவரும் கலந்துரையாடல்கள், நாம் அனைவரும் பெற்றுள்ள திருமுழுக்கில் தன் ஆதாரத்தைக் கொண்டுள்ளதால், உண்மையின் பேச்சுவார்த்தைகளை நோக்கி பிறரன்பின் பேச்சுவார்த்தைகள் அழைத்துச் செல்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
வெவ்வேறு கலாச்சரங்களில், சமூகத்தில், மனிதச் சூழல்களில் தன் வேரைக் கொண்டு வளரும் ஒரே விசுவாசம் பல்வேறு விதங்களில் தன்னை வெளிப்படுத்தி வருவது, அதாவது திருஅவை ஒழுங்குமுறைகள், வழிபாட்டு முறைகள், ஆன்மீக பாரம்பரியங்கள் என உலகின் பலபகுதிகளில் வேறுபட்டு நிற்பது, அதன் வளமையைக் காட்டுகிறது என்ற திருத்தந்தை, பிறரன்பில் இறையியல் பேச்சுவார்த்தைகளின் ஒளியில் நாம் தொடர்வது நம்பிக்கைத் தருவதாக உள்ளது என மேலும் கூறினார்.
ஒன்றிப்பை நோக்கிய பாதையில் கத்தோலிக்க திருஅவைக்கும் ஆர்த்தடாக்ஸ் கீழைவழிபாட்டுமுறை சபைகளுக்கும் இடையே பயிற்சிக்கான அருள்பணியாளர்கள் பரிமாற்றம் இடம்பெறுவது குறித்த தன் மகிழ்ச்சியையும் வெளியிட்டார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்