தேடுதல்

ஒன்றிணைந்து பயணிக்கக் கற்றுக்கொள்வோம்

மத்திய கிழக்கு, பாலஸ்தீனம், இஸ்ரயேல், உக்ரைன், மற்றும் போரினால் பாதிக்கப்படும் மக்கள் அனைவருக்காகவும் செபிப்போம்

மெரினா ராஜ் - வத்திக்கான்

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு திருத்தந்தை புனித ஆறாம் பவுல் மற்றும் கீழை ரீதி கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும் தலைவர் முதலாம் Athenagoras இருவரும் சந்தித்த நாளை நினைவுகூரும் இந்த மாதத்தில் ஒன்றிணைந்து நடத்தல், செபித்தல், பணியாற்றுதல் போன்றவற்றை அவர்கள் இருவரிடமிருந்து கற்றுக்கொள்வோம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 6 சனிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரினால் பாதிக்கப்படும் மக்களுக்காக உலக அமைதி, போன்றவற்றிற்காக செபிக்கவும் திருப்பயணிகளிடம் கேட்டுக்கொண்டார்.

பல நூற்றாண்டுகளாக கத்தோலிக்கர்கள் மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கு இடையிலான தகவல்தொடர்பு இல்லாத சுவரானது இவ்விருவரின் சந்திப்பால் உடைக்கப்பட்டது என்றும், கிறிஸ்தவ ஒன்றிப்பில் நாமும் வளர ஒன்றிணைந்து பயணிக்க அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்

எருசலேமில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சகோதரத்துவ உறவை நினைவுகூர்ந்து மத்திய கிழக்கு, பாலஸ்தீனம், இஸ்ரயேல், உக்ரைன், மற்றும் போரினால் பாதிக்கப்படும் மக்கள் அனைவருக்காகவும் செபிப்போம் என்றும், போர்களினால் எத்தனையோ மரணங்கள், அழிவுகள் ஏற்படுகின்றன எனவே உலகம் முழுவதும் அமைதி நில செபிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஈரான் மக்கள் குறிப்பாக கெர்மானில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தார், காயமடைந்தோர் துன்புற்றோர் அனைவருடனும் தனது ஆன்மிக நெருக்கத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

திருக்காட்சி என்பது குழந்தை மறைப்பணியாளர்களுக்கான நாள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், உலகம் முழுவதிலும் உள்ள மறைப்பணி சிறார் மற்றும் இளையோர்க்கு தனது வாழ்த்துக்களையும், நற்செய்தி அறிவிப்பிற்கான செபம் மற்றும் உறுதியான ஆதரவு, குறிப்பாக மறைப்பணித்தளங்களில் இளைஞர்களை மேம்படுத்தும் அவர்களது பணிக்காக தன் நன்றியினையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 January 2024, 15:46