சோதனையிலிருந்து விடுவிக்கும் இயேசுவின் துணையை நாடுவோம்

நம் ஆன்மாவை சங்கிலியால் கட்டிவைக்க அலகை விரும்புகின்றது, நமது சுந்தத்திரத்தை முடக்கி வைக்கும் இத்தகைய சங்கிலிகள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். - திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

தீயஆவி நமது ஆன்மாவை தனது சங்கிலியால் கட்டிப்போட விரும்புகின்றது என்றும் இத்தகைய தீய ஆவியிடம் உரையாடாது நம்மை இச்சோதனையிலிருந்து விடுவிக்கும்  இயேசுவின் துணையை நாம் அழைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 28 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செபஉரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிறு நற்செய்தி வாசகமான தீயஆவி பிடித்தவரைக் குணமாக்குதல் பகுதி பற்றி எடுத்துரைத்தார்.

அடிமையாக்குதல், எப்பொழுதும் அதிருப்தியடைந்த நிலையில் இருத்தல், ஆற்றல், உடைமைகள் மற்றும் உணர்வுகளை விழுங்கும் அடிமைத்தனங்கள், சுயமரியாதை, அமைதி மற்றும் வாழ்க்கையை அன்பு செய்யும் திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துதல், அவநம்பிக்கையுடன் எதிர்காலத்தைப் பார்க்க வைக்கும் பய உணர்வு, அதிகாரம், மோதல்களை உருவாக்கும் பொருளாதார அநீதி என்பன போன்ற பல தீயஆவியின் சங்கிலிகளால் நாம் பிணைக்கப்பட்டுள்ளோம் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் ஆன்மாவை சங்கிலியால் கட்டிவைக்க அலகை விரும்புகின்றது என்றும், நமது சுதந்திரத்தை முடக்கி வைக்கும் இத்தகைய சங்கிலிகள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்மைக் கட்டுப்படுத்தும் தீய ஆவியின் சங்கிலிகளில் இருந்து நம்மை விடுவிக்க இயேசுவால் முடியும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு தீய ஆவியை அதட்டி அதனை வெளியேறச் செய்கின்றார் என்றும் அதனோடு அவர் ஒருபோதும் உரையாடவில்லை என்றும் எடுத்துரைத்தார்.

தீய ஆவியோடு நாம் ஒருபோதும் உரையாடலை வளர்க்கக் கூடாது என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு, தன்னை பாலைவனத்தில் கேள்விகள் கேட்டு சோதித்த அலகைக்கு இறைவார்த்தையாலேயே பதிலளித்தார் என்றும், அவர் ஒருபோதும் அதனுடன் உரையாடவில்லை என்றும் கூறினார்.

தீயஆவியோடு உரையாடல் நிகழ்த்தும்போது நாம் ஒருபோதும் வெற்றியடைவதில்லை மாறாக தீய ஆவியே நம்மை வெற்றி கொள்ளும் என்பதால் அதனோடு ஒருபோதும் உரையாடக்கூடாது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தகைய நேரத்தில் நாம் இயேசுவின் துணையை நாடவேண்டும் என்றும், அவர் நம்மை தீயஆவியின் பிடியிலிருந்து இருந்து விடுவிப்பார் என்றும் கூறினார்.     

நம்மை சோதிக்கும் தீயஆவியிடமிருந்து நம்மை விடுவிக்க இயேசு முழு பலத்துடன் அப்பாலே போ சாத்தானே, இந்த இதயங்களை அமைதியாக வாழ விடு, உலகத்தை, குடும்பத்தை, சமூகத்தைப் பிரிக்காதே, அவர்கள் தீய ஆவியை அல்ல மாறாக எனது தூய ஆவியின் கனிகளைக் உருவாக்குபவர்கள், என்று கூறி தீயஆவியை தனது முழு வல்லமையுடன் இயேசு விரட்டுகின்றார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

என் இதயத்தை இறுக்கும் சங்கிலிகளிலிருந்து நான் உண்மையில் விடுதலை பெற வேண்டுமா? தீமையின் சோதனைகள் என் ஆன்மாவிற்குள் ஊடுருவுவதற்கு முன்பாக, "இல்லை" என்று சொல்வது எப்படி என எனக்குத் தெரியுமா? நான் இயேசுவை அழைக்கிறேனா, அவர் என்னைக் குணப்படுத்த என்னில் செயல்பட அனுமதிக்கிறேனா? என்று நம்மை நாம் கேள்விக்குட்படுத்த அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 January 2024, 13:23