தேடுதல்

போர் என்பது மனித குலத்திற்கு எதிரான குற்றம்

உலகின் பல பகுதிகளிலும், போரின் கொடுமையை அனுபவிக்கும் மக்களை குறிப்பாக உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல் பகுதிகளில் வாழும் மக்களை நாம் மறந்துவிடக் கூடாது

மெரினா ராஜ் – வத்திக்கான்

பொதுமக்களிடையே மரணத்தை விதைத்து, நகரங்களையும் அதில் உள்ள பொதுச்சொத்துக்களையும் அழிக்கும் போரானது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்றும், மக்களுக்கு அமைதி தேவை! உலகிற்கு அமைதி தேவை என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 14 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமைதிக்கான கல்வியினை எல்லாருக்கும் கற்பிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு ஏராளமானவர்கள் உயிரிழந்ததை நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிக்கக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை அவர்கள், உலகின் பல பகுதிகளிலும், போரின் கொடுமையை அனுபவிக்கும் மக்களை குறிப்பாக உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல் பகுதிகளில் வாழும் மக்களை நாம் மறந்துவிடக் கூடாது என்றும் கூறினார்.

ஆண்டின் தொடக்கத்தில் அமைதிக்கான வாழ்த்துக்களை நாம் பரிமாறிக் கொண்டோம், ஆனால் ஆயுதங்கள் தொடர்ந்து மக்களைக் கொன்று அழித்துக்கொண்டே இருக்கின்றன என்றும், போர்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழி அல்ல என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று செபிப்பதாகவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 January 2024, 13:38