விசுவாசக் கோட்பாட்டுத்துறையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டோருடன் திருத்தந்தை விசுவாசக் கோட்பாட்டுத்துறையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டோருடன் திருத்தந்தை  (ANSA)

உடன்பிறந்த உணர்வுடன் கூடிய புதிய கனவின் தேவையுள்ளது

உலகம் புதிய வாழ்வின் இறைவாக்கினர்களுக்காகவும், பிறரன்பின் சான்றுகளுக்காகவும் காத்திருக்கும் வேளையில், அன்பை அருளடையாளத்தின் மீட்பு சக்தியாக மாற்றுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பெரு மாற்றங்களைக் கண்டுவரும் இன்றைய காலக்கட்டத்தில் விசுவாசத்தைப் புரிந்துகொள்வதில் உதவ அர்ப்பணிக்கும் விசுவாசக் கோட்பாட்டுத் துறையின் அங்கத்தினர்களுக்கு மூன்று தலைப்புகளின்கீழ் உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விசுவாசக் கோட்பாட்டுத்துறையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டோரை, ஜனவரி 26, வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை, அருளடையாளம், மாண்பு, விசுவாசம் என்ற மூன்று விடயங்கள் குறித்து தன் கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அருளடையாளங்களின் ஏற்புடைமை குறித்து அண்மை நாட்களில் இத்திருப்பீடத்துறையில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவது குறித்தும் தன் உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருஅருளடையாளங்கள் வழியாகவே திருஅவையின் வாழ்வு வளப்படுத்தப்பட்டு வளர்கின்றது என்பதால் இத்திருஅருளையாடங்களை நிறைவேற்றுபவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.

இன்றைய உலகம் புதிய வாழ்வின் இறைவாக்கினர்களுக்காகவும், பிறரன்பின் சான்றுகளுக்காகவும் காத்திருக்கும் வேளையில், அன்பை அருளடையாளத்தின் மீட்பு சக்தியாக மாற்றுவோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் இரண்டாவது கருத்தாக மாண்பை முன்வைத்த திருத்தந்தை, சமூகத்தில் முக்கியத்துவம் பெறாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், உடன்பிறந்த உணர்வுடன் கூடிய புதிய கனவு ஒன்றின் தேவை குறித்தும் எடுத்துரைத்தார்.

மூன்றாவது கருப்பொருளாக விசுவாசம் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, Evangelii gaudium என்ற சுற்றுமடல் 10 ஆண்டுகளை நிறைவுச் செய்ததையும், வரவிருக்கும் ஜூபிலி ஆண்டு குறித்தும் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இன்றைய உலகில் விசுவாசம் என்பது ஓரம் தள்ளப்படுகிறது என்பதை எவராலும் மறுக்கமுடியாது என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இததகைய ஒரு சூழலில் விசுவாசத்தை எவ்வாறு, குறிப்பாக இளையோரிடையே அறிவிக்கலாம் என்பது குறித்து சிந்திக்கவேண்டியது அவசியம் என்பதையும் முன்வைத்தார்.

மறைப்பணி சார்ந்த ஆசீர் அனைவருக்கும் எவ்வித வேறுபாடும் இன்றி வழங்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வழிபாட்டுமுறைகளுக்கு வெளியே வழங்கப்படும் இந்த ஆசீர் அதை பெறுபவர்களின் ஒழுக்க வாழ்வை ஒரு முன்நிபந்தனையாக முன்வைப்பதில்லை எனவும், ஒரு தம்பதி ஆசீரைக் கேட்கும்போது அது தனிமனிதருக்கானதுதானேயொழிய அவர்களின் ஐக்கிய வாழ்வை அங்கீகரிப்பதாகாது எனவும் எடுத்துரைத்தார்.

விசுவாசக் கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறையின் நிறையமர்வுக் கூட்டத்தில் பங்குபெற்றோரின் பணிகளுக்கு தன் நன்றியை வெளியிட்டதுடன், அவர்களின் தொடர்ந்த பணிகளுக்கு தன் ஊக்கத்தையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 January 2024, 16:02