புதிய காற்று, கனவு காணுதல், தொலைநோக்குப் பார்வை தேவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
திருப்பீடத்தின் பல்வேறுத் துறைகளுடனும் ஐக்கிய நாட்டு அமைப்புகளில் பணியாற்றும் திருப்பீடப் பிரதிநிதிகளுடனும் ஒன்றிணைந்து சேவையாற்றும் TYPA எனப்படும் தெனியோலோ இளம்பணியாளர் அமைப்பின் அங்கத்தினர்களை வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று இக்குழுவின் அங்கத்தினர்களை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பின் இளம் பணியாளர்கள் திருப்பீடத்துடனான உறவுகளினாலும், பன்னாட்டு நிறுவனங்களில் தங்கள் பணிகள் வழியாகவும் இவ்வுலகின் தற்கால சவால்களை எதிர்கொள்வதற்கான பலத்தைப் பெறுவது குறித்து எடுத்துரைத்தார்.
அதேவேளை, இந்த இளம் பணியாளர்கள், திருஅவை நிறுவனங்களுக்கு புதிய மூச்சுக்காற்று, கனவு காண்பதற்கான சக்தி, தொலைநோக்குப் பார்வைக்கான பேரார்வம் போன்றவைகளை வழங்கி வருகிறார்கள் என்பதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, தொலைநோக்குப் பார்வையற்ற, மற்றும் கடந்த கால அனுபவங்களின் தொடர்பற்ற, பலவீனமான சிந்தனைகளுடன் கூடிய முடிவுகளை எடுத்துவரும் நவீன உலகின் போக்கு குறித்தும் கவலையை வெளியிட்டார்.
இத்தகையப் போக்குகளால் சுயநலம்தான் அதிகரிக்கிறதே தவிர, பொதுநலன் மற்றும் வருங்காலம் குறித்த அக்கறை வெளிப்படவில்லை என்பதையும் தெரிவித்த திருத்தந்தை, இளையோரின் படைப்புத்திறன் மறைந்து, செயற்கை முறைகள் ஆக்ரமித்துவருவதைக் காணமுடிகிறது என மேலும் கூறினார்.
இன்றைய உலகின் இளையோரிடம் அதிகம் அதிகமாக எதிர்பார்க்கும் உலகம், அவர்களை கசக்கிப் பிழியும் மனநிலையை விட்டொழிக்க வேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர் கனவு காண்பவர்களாக மாறவேண்டுமேயொழிய, வாழ்விலிருந்து ஓய்வு பெற்றவர்கள் போல் ஒதுங்கியிருந்து செயல்பட முடியாது எனவும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்