வெற்றிக்காக நாம் தொடர்ந்து போராடவேண்டும் – திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
நமது வாழ்கையைப் போலவே விளையாட்டும், அதன் வெற்றிக்காக நாம் தொடர்ந்து போராடவேண்டும் என்றும், மாண்பு, விளையாட்டு விதிகள், வளர்ச்சிக்கான உரையாடல் போன்றவற்றின் உதவியுடன் நாம் செயல்படும்போது இன்னும் அதிகமாக விளையாட்டிலும் வாழ்விலும் சிறப்படைய முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 29 திங்கள்கிழமை வத்திக்கானின் திருத்தந்தையர் அறையில் பர்செலோனாவின் இராயல் டென்னிஸ் (Royal Tennis Club Barcelona) எனப்படும் வலைப்பந்து விளையாட்டுக்கழகத்தாரின் 125 ஆண்டை முன்னிட்டு அதன் உறுப்பினர்கள் ஏறக்குறைய 30 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
விளையாட்டு வீரர்களுக்கு இடையிலான சவாலானது எதிராளியை வெல்லவேண்டும் என்ற விருப்பத்துடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், தனி நபர் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கு விளையாட்டானது மிகுந்த வாய்ப்பளிக்கின்றது என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திறந்த மனப்பான்மை, பிற கலாச்சாரங்களுடன் உரையாடல், புதிய எதார்த்தங்களுக்கு உயிரளித்தல் போன்றவற்றை விளையாட்டு வழங்குகின்றது என்று எடுத்துரைத்தார்.
டென்னிஸ் விளையாட்டும் நமது வாழ்கையைப் போலவே என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், வெற்றிக்காக நாம் தொடர்ந்து போராடவேண்டும் என்றும், மாண்பு, விளையாட்டு விதிகள், வளர்ச்சிக்கான உரையாடல் போன்றவற்றின் உதவியுடன் நாம் செயல்படும்போது இன்னும் அதிகமாக சிறப்படைய முடியும் என்றும் கூறினார்.
விளையாட்டுத்தளத்தில் இருப்பதைப் போலவே, சில சமயங்களில் நாம் தனிமையாக இருப்பதை உணர்கிறோம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தனியாக நாம் விளையாடும் நேரங்களில் கூட மரியாதை, புரிதல், மற்றவர்களுடன் தொடர்ந்து தொடர்புகொள்வதன் அவசியம் என்பவற்றைப் பற்றி நமக்குக் கற்பிக்கும் இறைவனின் முன்னிலையில் நாம் எப்போதும் இருக்கிறோம் என்றும் கூறினார்.
இராயல் டென்னிஸ் விளையாட்டுக் கழகமானது பன்னாட்டு டென்னிஸ் விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், சிறந்த எதிர்காலத்தை கனவு காணும் சிறாருக்கு, ஒருங்கிணைந்த, மனித மற்றும் ஆன்மிக வளர்ச்சி மிக முக்கியமானது என்பதை தங்களது பயிற்சிகள் வழியாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சிக்கலான சமூக சூழல்களில், விளையாட்டின் மதிப்புகளிலிருந்து சிறார் பயனடையக்கூடியவர்களாகவும், உயர்நிலைப் போட்டிகளில் வெற்றி பெறக்கூடியவர்களாகவும் மாற அவர்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை அவர்கள் குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதை ஒருபோதும் நிறுத்தி விடக்கூடாது என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்