தேடுதல்

ஹோலோகாஸ்ட் பன்னாட்டு நினைவு நாள்

1933 ஆண்டு முதல் 1945 ஆண்டுகளுக்கு இடையில் பிற சிறுபான்மையினரின் எண்ணற்ற உறுப்பினர்கள், 60 இலட்சம் யூதர்கள், ஜெர்மனியின் நாசிச ஆட்சியால் படுகொலை செய்யப்பட்டனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடந்த நூற்றாண்டின் முதல் பாதியில் இலட்சக்கணக்கான யூத மக்கள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் அழிக்கப்பட்ட நினைவை நாம் மறக்கவோ மறுக்கவோ கூடாது என்பதை ஹோலோகாஸ்ட் பன்னாட்டு நினைவு நாள் வலியுறுத்துகின்றது என்றும், மனித நேயத்தை மறுத்து, கொடூரமான முறையில் வெறுப்பினால் மக்களை அழித்த வன்முறையை, ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது என்றும் தனது டுவிட்டர் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 27 சனிக்கிழமை, ஹோலோகாஸ்ட் பன்னாட்டு நினைவு நாளை முன்னிட்டு ஹாஸ்டாக் “நாங்கள் இந்த நாளை நினைவுகூர்கின்றோம்” என்ற தலைப்பில் தனது கருத்துக்களை இவ்வாறு டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெறுப்பு மற்றும் வன்முறையினால் மக்கள் அழிக்கப்பட்டதை இந்த நாள் எடுத்துரைக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலட்சக் கணக்கான யூத மக்கள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் கொடூரமாக அழிக்கப்பட்டதை நினைவுகூரும் இந்நாளில், கண்டனம், வெறுப்பு மற்றும் வன்முறையின் வாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்றும், நமது மனித நேயத்தை வெறுத்து ஒதுக்கும் இந்த நாளை நாம் அனைவரும் மறந்துவிடாமல் இருக்க இந்த நினைவு நாள் நம் அனைவருக்கும் உதவட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1933 ஆண்டு முதல் 1945 ஆண்டுகளுக்கு இடையில் பிற சிறுபான்மையினரின் எண்ணற்ற உறுப்பினர்கள், 60 இலட்சம் யூதர்கள், ஜெர்மனியின் நாசிச ஆட்சியால் படுகொலை செய்யப்பட்டனர். அதாவது, ஐரோப்பாவின் யூத மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களாகிய இலட்சக்கணக்கான மக்கள் நாசிச ஆட்சி மற்றும் அதன் ஒத்துழைப்பாளர்களால் கொல்லப்பட்டதை இந்நாள் நினைவுகூருகிறது.

திருத்தந்தையின் காணொளிச்செய்தி

மேலும் இந்த நாள் குறித்து சிறப்பு காணொளிச்செய்தி ஒன்றினையும் வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நினைவுகூர்தல் என்பது மனித நேயத்தை வெளிப்படுத்துவது. நினைவுகூர்தல் என்பது நாகரீகத்தின் அடையாளம். நினைவுகூர்தல் என்பது அமைதியும் சகோதரத்துவமும் கொண்ட நல்ல எதிர்காலத்திற்கான ஒரு நிபந்தனை என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அச்செய்தியில் இந்த மரணத்தின் பாதை, அழிவின் பாதை, கொடுமையின் பாதை எப்படி உருவானது என்பது குறித்து கவனமாக இருங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 January 2024, 13:25