புதன் மறைக்கல்வி உரை - உணவின் மீது கொண்டுள்ள உறவு
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஜனவரி 10 புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கத்தின் 3ஆம் பகுதியாக பெருந்தீனி என்ற தலைப்பில் உணவின் மீது கொள்ளவேண்டிய உறவு பற்றி எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் திருப்பயணிகள் அனைவரும் திருத்தந்தையின் வருகைக்காக மிக ஆவலுடனும் உற்சாகத்துடனும் காத்திருந்தனர். பல்வேறு மக்கள் குடும்பம், நண்பர்கள் என ஒன்றிணைந்து திருப்பயணிகள் காத்திருக்க அவர்கள் முன் அரங்கத்தின் மேடையில் தோன்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பயணிகள் அனைவரும் மரியாதையுடன் எழுந்து நின்று மிகுந்த ஆரவாரத்துடனும் மகிழ்வுடனும் கரவொலி எழுப்பி திருத்தந்தையை வரவேற்றனர். புதன் மறைக்கல்வி உரை வழங்கும் இடத்தை வந்தடைந்ததும் சிலுவை அடையாளம் வரைந்து புதன் மறைக்கல்வி கூட்டத்தை ஆரம்பித்தார் திருத்தந்தை. அதன்பின் திருவிவிலியத்தில் உள்ள நீதிமொழிகள் புத்தகத்தில் இருந்து இறைவார்த்தைகளானது இத்தாலியம், அரபு, ஆங்கிலம், போர்த்துக்கீசியம், பிரெஞ்சு, இஸ்பானியம், ஜெர்மானியம் ஆகிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.
நீதிமொழிகள் 23; 15,20,21
பிள்ளாய், நீ ஞானமுள்ளவனாயிருந்தால், நான் மனமகிழ்ச்சி அடைவேன். உன் நாவு நேர்மையானவற்றைப் பேசினால், என் உள்ளம் களிகூரும். குடிகாரரோடு சேராதே; பெருந்தீனியரோடு சேர்ந்து கொண்டு அவர்களைப் போலப் புலால் உண்ணாதே. குடிகாரரும் பெருந்தீனியரும் முடிவில் ஏழைகளாவர்; உண்டு குடித்த மயக்கம் கந்தையை உடுத்தும்.
இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என்ற மறைக்கல்வி தொடரின் மூன்றாம் பகுதியாக பெருந்தீனீ என்ற தலைப்பில் உணவின் மீது கொள்ளவேண்டிய உறவு பற்றிய தனது கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிமடுப்போம்.
திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை
அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!
நல்லொழுக்கங்கள் மற்றும் தீயொழுக்கங்கள் பற்றிய நமது தொடர் மறைக்கல்வியில் இன்று நாம் பெருந்தீனி என்பது பற்றிக் காண்போம்.
இயேசு கானா ஊரில் நடந்த திருமணத்தில் செய்த முதல் அற்புதமானது மனித மகிழ்ச்சியின் மீது அவர் கொண்டிருந்த இரக்கத்தை வெளிப்படுத்துகிறது: விருந்து நன்றாக முடிந்து, புதுமணத் தம்பதிகள் மகிழும் வண்ணம் அதிக அளவில் நல்ல திராட்சை இரசத்தை அவர்களுக்குக் கொடுக்கிறார் இயேசு. இயேசு அவருடைய பணி முழுவதும், திருமுழுக்கு யோவானிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இறைவாக்கினராகக் காட்சியளிக்கின்றார். யோவான் தனது பணிவாழ்வில் பாலைவனத்தில் கிடைத்ததை உண்டார். ஆனால் இயேசுவோ பல நேரங்களில் உணவு உண்ணும் மேசையில் வெளிப்படுத்தப்படுகின்றார். அவருடைய இச்செயல் பலருக்குத் தவறான எண்ணங்களை ஏற்படுத்துகின்றது. பாவிகளுக்கு இரக்கம் காட்டுவது மட்டுமல்லாமல் அவர்களோடு சேர்ந்து உணவு உண்கின்றார் என்று அவரைப் பற்றிய குற்றச்சாட்டுக்களை எடுத்துரைக்கின்றனர். அவரது இச்செயலானது வெறுத்து ஒதுக்கப்பட்ட மக்கள் அனைவருடனான நல்உறவினை வெளிப்படுத்துகின்றது.
இருப்பினும் யூதக் கட்டளைகள் மற்றும் நியமங்களுக்கு தான் முழுமையாகக் கீழ்ப்படிந்திருப்பதை நமக்கு வெளிப்படுத்தும் அதேவேளை தன் சீடர்களுக்கும் வெளிப்படுத்துகின்றார் இயேசு. எனவே தான், சீடர்கள் ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்துகொண்டே வழிநடந்த போது அவர்களைக் கேள்வி கேட்ட பரிசேயர்களுக்கு மறைநூல் கொண்டே பதிலளிக்கின்றார். தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா? அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?” என்றார். மேலும், “ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஆதலால் ஓய்வுநாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார். எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசு, ஒரு அழகான உவமையுடன், ஒரு புதிய கொள்கையைக் கூறுகிறார்: “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்கமுடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பிருக்க முடியாது. ஆனால், மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள் என்கின்றார். ஆம் நாம் இயேசுவோடு இருக்கும்போது மகிழ்வுடன் இருக்க வேண்டும். அதேவேளையில் மிகவும் எளியவர்கள் மற்றும் ஏழைகள் படும் துன்பத்தில் அவர்களோடு இருந்து இயேசுவின் துன்பத்திலும் நாம் பங்கேற்க வேண்டும். ஏனெனில் இயேசு எல்லாருக்குமானவர்.
பண்டைய உலக கலாச்சாரங்களின் அடிப்படைக் கற்களில் ஒன்றாக இருந்த தூய உணவுகள் மற்றும் தூய்மையற்ற உணவுகளுக்கு இடையிலான வேறுபாட்டை இயேசு கைவிடுகிறார். உண்மையில் இயேசு “வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப் படுத்த முடியாது. மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும் என்று கற்பிக்கிறார் (மாற்கு 7:19). இதனாலேயே கிறிஸ்தவம் தூய்மையற்ற உணவுகளைப் பற்றி சிந்திக்கவில்லை. ஆனால் நாம் உணவோடு கொண்டிருக்க வேண்டிய கவனம் முக்கியமானது. எனவே நமது கவனம் உணவின் மீது அல்ல, அதனுடனான நமது உறவின் மீது இருக்கவேண்டும்.
உணவு ஊட்டச்சத்து தொடர்பாக இயேசு ஏற்படுத்திய இந்த அமைதியான உறவு, பல ஏற்றத்தாழ்வுகள், நோயியல்களில் வெளிப்படும் நல்வாழ்வு என்று அழைக்கப்படவேண்டும் குறிப்பாக சமூகங்களில் மீண்டும் கண்டறியப்பட்டு மதிப்புமிக்கதாக இருக்க வேண்டும். அதிகமாக உண்ணுதல், குறைவாக உண்ணுதல் தனிமையில் உணவு உண்ணுதல், போன்றவைகள் பசியின்மை, உடல்பருமன், உணவு பழக்கவழக்கக் குறைபாடு, ஆகியவை உணவுடன் மோசமான உறவை ஏற்படுத்த உதவுகின்றன. இத்தகைய உணவுச்சீர்கேடுகளினால் ஏற்படும் விளைவுகளை மருந்துகள் மற்றும் உளவியல் சிகிச்சைகள் நிவர்த்தி செய்ய முயல்கின்றன.
இத்தகை நோய்கள், பெரும்பாலும் மிகவும் வேதனையானவை, அவை உடல் மட்டுமல்லாது மனம் மற்றும் ஆன்மாவின் வேதனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இயேசு போதித்தது போல், உணவுகள் நம்மைத் தீட்டுப்படுத்தாது மாறாக உணவுடன் நாம் கொண்டுள்ள உறவு எத்தகையது என்பதைப் பொறுத்தே அது தீர்மானிக்கப்படுகின்றது. சம நிலையான அல்லது அளவுக்கதிகமான உணவு, பெற்ற உணவிற்கு நன்றி கூறும் மனம் அல்லது தன்னலத்திமிர் கொண்ட மனம், தேவையில்ருப்பவர்களுடன் உணவைப் பகிரும் குணம் அல்லது தேவைக்கு அதிகமாக பதுக்கி வைக்கும் குணம் என பல்வேறு செயல்கள் வெளிப்படுகின்றன. நீங்கள் உணவை எப்படி உண்கின்றீர்கள் என்று கூறுங்கள் உங்கள் ஆன்மா எப்படி உள்ளது என்று நான் கூறுகின்றேன்.
நமது பண்டைய தந்தையர்கள் பெருந்தீனியை காஸ்ட்ரிமார்ஜியா அதாவது கொடிய பாவங்கள் என்று அழைத்தனர். சமூகக் கண்ணோட்டத்தில் பெருந்தீனி என்பது உல்கைக் கொல்லும் மிகவும் ஆபத்தான ஒன்றாகும். ஒரு சிறிய இனிப்பு துண்டு நமக்கு பாவத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தாது, ஆனால் சில நூற்றாண்டுகளாக, கிரகத்தின் பொருட்களின் மீது நாம் கொள்ளும் பேராசையானது அனைவரின் எதிர்காலத்தையும் அழிக்கின்றது. எல்லாவற்றிற்கும் நம்மை தலைவர்களாக மாற்றிக் கொள்ளும் மனம், எல்லாமே நமது பாதுகாவலில் ஒப்படைக்கப்பட்டது என்கின்ற எண்ணம் எல்லாமே இதனால் தான் உருவானது. மனிதர்கள் என்ற நிலையிலிருந்து நாம் அதிகப்படியாக நுகர்வோர் என்ற நிலைக்கு மாறிவிட்டோம். இதுவே பெரிய பாவம். "நற்கருணையின் மனிதர்களாக, நன்றி செலுத்தும் திறன் கொண்டவர்களாகவும், பூமியைப் பயன்படுத்துவதில் விவேகமுள்ளவர்களாகவும் உருவாக்கப்பட்ட நாம் இவ்வுலகை வேட்டையாடுபவர்களாக மாறிவிட்டோம், மேலும் இந்த வகையான "பெருந்தீனி" மிகவும் தீங்கு விளைவித்துள்ளது என்பதை இப்போது நாம் உணர்கிறோம். நமக்கும் நாம் வாழும் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எல்லாவிதமான தனிப்பட்ட பெருந்தீனி மற்றும் சமூகப் பெருந்தீனியிலிருந்து நற்செய்தி நம்மைக் குணப்படுத்தட்டும்.
இவ்வாறு தனது கருத்துக்களை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரினால் பாதிக்கப்படும் மக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிக்க அழைப்புவிடுத்தார். துன்புறும் உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல் மக்கள் மற்றும் போரினால் துன்புறும் அனைத்து மக்களும் அமைதியைப் பெற்று வாழ அவர்களுக்காக செபிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாடுகளின் அதிகாரிகளின் இதயங்களில் அமைதியின் விதையை விதைக்க இறைவனை நோக்கி செபிப்போம் என்று அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபத்தினால் நமது ஆன்மிக உடன் இருப்பை புதுப்பிப்போம் என்றும் கூறினார்.
இவ்வாறு தனது விண்ணப்பங்களை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறுதியாக கூடியிருந்த மக்களுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்