தேடுதல்

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்று வரும் கூட்டத்தில் அதன் பங்கேற்பாளர்கள் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்று வரும் கூட்டத்தில் அதன் பங்கேற்பாளர்கள்   (ANSA)

அநீதிகளுக்குத் தீர்வு காண்பதே அமைதியின் நோக்கம்!

வளங்களின் சுரண்டல் ஒரு சிலரை வளப்படுத்துவது தொடர்கிறது, அதேவேளையில், இந்த வளங்களின் இயற்கையான பயனாளிகளான முழு மக்களையும் ஆதரவின்மை மற்றும் வறுமை நிலையில் தள்ளுகிறது - திருதந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் வழியாக, உலகளாவிய அமைதி மற்றும் உண்மையான வளர்ச்சியின் இலக்குகளைத் திறம்பட தொடரக்கூடிய அனைத்துலக அரசியல் நடவடிக்கைக்கான தெளிவான தேவை உள்ளது என்று கூறியுள்ளார் திருதந்தை பிரான்சிஸ்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் ஜனவரி 15 ஆம் தேதி  முதல் தொடங்கி நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை, இக்கூட்டத்தின் பங்கேற்பாளர்கள் அனைவரும் உலகின் வறுமையை ஒழிப்பதில் தங்களுக்குரிய பொறுப்பினை உணர்வார்கள் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நம்முன் உள்ள சவால்களை எதிர்கொள்ள, குழுக்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளுக்கிடையில் சமூக ஒற்றுமை, உடன்பிறந்த் உறவு மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கான அவசரத் தேவையை உங்கள் விவாதங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள இக்கூட்டம் பெரும் உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

“நேர்மையால் வரும் பயன் நல்வாழ்வு; நீதியால் விளைவன என்றுமுள அமைதியும் நம்பிக்கையும்” (காண்க எசா 32:17) என்ற இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளை எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, அமைதி என்பது வெறுமனே போரின் கருவிகளை ஒதுக்கி வைப்பதை விட, மோதலின் மூல காரணங்களான அநீதிகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயற்கை வளங்களின் சுரண்டல் ஒரு சிலரை வளப்படுத்துவது தொடர்கிறது என்றும், அதேவேளையில், இந்த வளங்களின் இயற்கையான பயனாளிகளான முழு மக்களையும் ஆதரவின்மை மற்றும் வறுமை நிலையில் தள்ளுகிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

குறைந்த கூலிக்கு வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான உண்மையான வாய்ப்புகள் இல்லாமல் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பரவலாகச் சுரண்டப்படுவதையும் நாம் புறக்கணிக்க முடியாது என்றும் அச்செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

உலகமயமாக்கல் செயல்முறையானது, உலக நாடுகள் மற்றும் மக்களின் ஒன்றோடொன்று சார்ந்திருப்பதை இப்போது தெளிவாக நிரூபித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இந்த உலகமயமாக்கலானது பொருளாதார, கலாச்சார, அரசியல் மற்றும் மத விவாதங்களில் ஒரு அடிப்படை தார்மீக பரிமாணத்தைக் கொண்டுள்ளதை அனைத்துலகச் சமூகம் உணரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வன்முறை, ஆக்கிரமிப்பு மற்றும் துண்டாடுதல் ஆகியவற்றால் பெருகிய முறையில் அச்சுறுத்தப்படும் உலகில், உலகமயமாக்கலின் தொலைநோக்கு மற்றும் அறம்சார்ந்த நெறிமுறைகளை ஊக்குவிப்பதில் நாடுகளும் வணிகங்களும் இணைவது அவசியம் என்றும் விளக்கியுள்ள திருத்தந்தை, அரசியல் அல்லது பொருளாதாரம், நமது மனித குடும்பத்தின் பொது நலனுக்காக, ஏழைகள், வறியோர் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 January 2024, 14:58