தேடுதல்

மால்டா இராணுவ அதிகாரிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் மால்டா இராணுவ அதிகாரிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

ஏழைகள், நோயாளிகளுக்கு ஆற்றும் பணி, இயேசுவின் பணி

பலவீனமானவர்களுக்கு பணியாற்றுவதன் வழியாக நாம் கடவுளுக்கு மகிமை அளிக்கின்றோம். அவரது விருப்பத்திற்கு சான்றுபகர்கின்றோம். - திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஏழைகள் மற்றும் நோயாளர்களுக்குப் பணியாற்றுவதன் வழியாக இயேசுவுக்குப் பணியாற்றுகின்றோம் என்றும், பெத்தானியா நகர் மரியாவிற்கு இயேசு காட்டிய பணிவைப்போல நாமும் நமது சொல்லில் செயலில், அன்பு மற்றும் பணிவு கொண்டு வாழவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 27 சனிக்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் மால்டாவின் இராணுவ தூதர்கள் மாநாட்டின் பங்கேற்பாளர்கள் ஏறக்குறைய 170 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றிணைந்த வகையில் ஏழைகள் மதிக்கப்படுதல் மற்றும் நோயாளிகளுக்கு பாதுகாப்பளித்தல் என்ற அவர்களின் அரசியல் சட்டத்தை மேற்கோள்காட்டி உரையாற்றினார்.

விலையுயர்ந்த நறுமணத்தைலம் கொண்டு இயேசுவிற்குப் பணிவிடை செய்த பெத்தானியா நகர் மரியாவை சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இப்பெண் செய்ததும் எடுத்துக்கூறப்படும்; இவரும் நினைவுகூரப்படுவார் என்று நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்று கூறிய விவிலிய வார்த்தைகளையும் எடுத்துரைத்தார்.

நற்செய்தி அறிவித்தலையும் ஏழைகளுக்கு பணியாற்றும் செயலையும் ஒருங்கிணைத்தே இயேசு இவ்வாறு கூறினார் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், சிறியவர்கள், நோயாளிகள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு நாம் செய்யும் பணி இயேசுவின் கருணை மற்றும் மென்மையின் அடையாளம் என்றும் கூறினார்.

மேலும், பலவீனமானவர்களுக்கு பணியாற்றுவதன் வழியாக நாம் கடவுளுக்கு மகிமை அளிக்கின்றோம் என்றும், அவரது விருப்பத்திற்கு சான்றுபகர்கின்றோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 January 2024, 13:23