விவிலிய ஆய்வுகள் திருஅவையின் இதயம் போன்றன
மெரினா ராஜ் – வத்திக்கான்
விவிலிய ஆய்வு, விவிலிய தியானம், மற்றும் விவிலிய விளக்கங்கள் அனைத்தும் திருஅவையின் இதயத்தில் உள்ளன என்றும், கடவுளின் தூய மக்களினம் இதில் நம்பிக்கையுடன் பயணிக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 15 திங்கள் கிழமை வத்திக்கான் தூய கிளமெந்தினா அறையில் பிரான்சிஸ்கன் விவிலிய ஆராய்ச்சி மற்றும் தொல்பொருள் அகாடமியின் உறுப்பினர்கள் (Studium Biblicum Franciscanum) ஏறக்குறைய 120 பேரை சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவைக்கு வெளியே இத்தகைய ஆராய்ச்சிகள் எந்த பலனையும் தருவதில்லை ஏனெனில் அவை தாய்த்திருஅவையின் மதிப்புமிக்க இதயம் போன்றன என்றும் கூறினார்.
விவிலிய ஆராய்ச்சியின்போது நாம் ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு செவிசாய்க்கவும், அதனைப் பற்றி அறிந்துகொள்ளவும் முடிகின்றது என்றும், மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில், உலகில் எதிரொளிக்கச் செய்யும் வகையில், பணியாற்றும் அவர்களின் பணி விலைமதிப்பற்றது என்றும் கூறினார்.
எருசலேமில் அமைந்திருக்கும் இவ்விவிலிய அகாடமியானது, தனது ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்தவும், கற்பித்தல் மற்றும் கண்டறிதல் பணிகளில் அங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் இன்னும் அதிக ஆற்றலுடன் தொடர்ந்து பணியாற்றவும் ஊக்குவித்த திருத்தந்தை அவர்கள், புனித பூமியின் தற்போதைய நிலை மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது என்றும் எடுத்துரைத்தார்.
அருள்பணி Faltas, அவர்களுடன் ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு மிக அதிகமாகத் துன்புறும் காசா பங்குத்தளத்தில் உள்ள மக்களின் நிலையை பற்றி, தான் தொடர்ந்து அறிந்து கொண்டு வருதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நிலைமை மிகவும் மோசமானது, பெரியது என்னும் இரண்டு எடுத்துக்காட்டுக்களை அம்மக்களின் சூழல் எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார்.
போர் மற்றும் மோதல்களால் உண்டான இக்கட்டான இச்சூழல் மாற நாம் அனைவரும் தொடர்ந்து செபிக்க வேண்டும் என்றும், துன்புறுத்தப்பட்ட இத்தகைய இடங்களில் நீங்கள் இருப்பதன் காரணங்களையும் தரத்தையும் ஆழமாக ஆராய்வதற்கு செபம் உங்களுக்கு இன்னும் பெரிய ஊக்கமாக இருக்கட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
விவிலிய ஆராய்ச்சி மற்றும் தொல்பொருள் அகாடமியின் நூற்றாண்டு விழாவையொட்டி விவிலிய ஆராய்ச்சியாளர்களைச் சந்தித்த திருத்தந்தை அவர்கள், விவிலிய ஆதாரங்களின் கடுமையான மற்றும் அறிவியல் ஆய்வு, மிகவும் புதுப்பித்த முறைகள் மற்றும் தொடர்புடைய துறைகளால் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், எப்போதும் கடவுள் மக்களின் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டு, அவர்களின் மேய்ப்புப்பணியை நோக்கமாகக் கொண்டு திருஅவையின் நன்மைக்காக இணக்கத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்