திருநற்கருணை ஆராதனையில் நம்மோடு இருக்கும் கடவுள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
கடவுள் நம்மோடு இருக்கும் திருநற்கருணை ஆராதனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றும், அமைதியான ஆராதனையில், கடவுளின் வார்த்தையானது நமது வார்த்தைகளை விட மேலோங்கி இருக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜனவரி 20, சனிக்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் தேசிய அருங்கொடை இயக்கத்தின் உறுப்பினர்கள் ஏறக்குறைய 85 பேரை சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநற்கருணை செபவழிபாடு மற்றும் நற்செய்திப் பணி பற்றி அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
திருநற்கருணை செபவழிபாடு
அருங்கொடை இயக்கம் அதன் இயல்பிலேயே செபத்திற்கும், இறைவனைப் புகழ்வதற்கும், ஆராதிப்பதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது, அது மிக முக்கியம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், செயல்திறன் கொண்ட ஆதிக்கக் கலாச்சார உலகம் மற்றும் ஒருங்கிணைப்பில் அதிக கவனம் செலுத்தும் திருஅவையில், நாம் கடவுளின் இரக்கம் மற்றும் அருளுக்காக நன்றியினையும் ஆராதனையையும் அவருக்கு செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நற்செய்தி அறிவிப்பு
நற்செய்தி அறிவிப்பு என்பது அருங்கொடை இயக்கத்தின் மரபணு போன்றது என்றும், தூய ஆவியானவர் நமது இதயத்திலும் வாழ்விலும், வரவேற்கப்படுகின்றார் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வாறு செயல்படும் தூய ஆவியை அகற்றவோ வெளியேற்றவோ நம்மால் இயலாது என்றும் கூறினார்.
தூய ஆவியானவர் விவரிக்க முடியாத தனது ஆற்றலினால், நாம் எப்பொழுதும் நற்செய்தியுடன் தொடர்புகொள்ள நம்மை அழைக்கின்றார் என்றும், திருத்தூதர்களான ஸ்தேவான், பிலிப்பு, பர்னபா, பேதுரு, பவுல் போல தூயஆவியுடன் பணிவாக இயைந்து ஒத்துழைத்து செயல்படுவது நமது கையில் உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நீளமான செபங்கள், அழகான பாடல்கள் மட்டும் இருந்து அயலாருடன் பொறுமையாக இருக்கும் குணம் நம்மிடம் இல்லாவிட்டால், நாம் செய்யும் செபத்தினால் ஒரு பயனும் இல்லை என்றும், நமது முதல் அறிவிப்பானது நமது சான்றுள்ள வாழ்வாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
திருத்தூதர் பேதுரு ஒற்றுமை என்னும் பண்பு கொண்டு சிறந்து விளங்கினார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தலத்திருஅவை ஆயர்கள், குழுக்கள், இயக்கங்கள் மறைமாவட்டங்கள் என அனவருடனும் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்றும், சகோதர உறவின் சான்று வாழ்வு, இணக்கம், பன்முகத்தன்மை, அர்ப்பண உணர்வு, பணி மனப்பான்மை கொண்டு திகழ வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்