மக்கள் எல்லாருக்கும் ஆசீர் அளிக்கும் நல்ல கடவுள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருஅவையில் இருக்கும் மக்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள். அவர்கள் அனைவருக்கும், எல்லா மக்களுக்கும், நன்மையின் கடவுள் ஆசீர் அளிக்கக் காத்திருக்கின்றார் என்றும், போர்கள் குழந்தைகளின் புன்னகையைப் பறித்துவிட்டன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 14 ஞாயிற்றுக்கிழமை மாலை இத்தாலியின் Che tempo che fa நிகழ்ச்சிக்கு சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து இணையம் வழியாக Fabio Fazio அவர்களுக்கு வழங்கிய நேர்காணலின் போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசக் கோட்பாட்டுத்துறையின் Fiducia supplicans என்ற திருஅவைக்கோட்பாட்டு அறிக்கை பற்றிய தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.
கிறிஸ்தவ ஒழுக்கமுறைக் கோட்பாடுகளுக்கு இயைந்தமுறையில் வாழாமல் திருஅவை ஆசீரை வேண்டும் தம்பதியருக்கு இறையாசீர் வழங்கப்படுதல் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, மனம் திரும்பி கடவுளிடம் வரும் மக்களை மன்னித்து ஏற்கவேண்டும் திருஅவை மேய்ப்புப் பணியின் மிக முக்கியமான கடமை இது என்றும் வலியுறுத்தினார்.
நம் அனைவரின் தந்தையாகியக் கடவுள், நம் பாவங்களுக்காக நம்மை வெறுத்து ஒதுக்குவதில்லை மாறாக நம்மோடு உடன் பயணிக்கின்றார் என்றும் எவரும் நரகத்திற்குப் போகாதபடி அது வெறுமையாக இருக்கவேண்டும் என விரும்புகின்றார் என்றும் கூறினார்.
மத்திய கிழக்கு மற்றும் உக்ரைனில் நடைபெற்று வரும் போர் குறித்த தனது கருத்துக்களை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியைக் கொண்டு வருவது என்பது கடினமானது தான் என்றாலும், போர் என்பது அதைவிட கடினமானது மற்றும் ஆபத்தானது என்றும் போரினால் குழந்தைகள் தங்கள் புன்னகையை இழந்துவிட்டார்கள் என்றும் கூறினார்.
கடந்த புதன்கிழமை உக்ரைன் நாட்டு சிறாரைத் தான் சந்தித்ததாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், குழந்தைகள் புன்னகைப்பது இயல்பான ஒன்று ஆனால் என்னைக் காண வந்த குழந்தைகள் முகத்தில் புன்னகை என்பது இல்லை என்றும், குழந்தைகளின் கனவுகளைத் தடுக்கும் போரினாலேயே இத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன என்றும் கூறினார்.
போர்களுக்குப் பின்னால் ஆயுத வர்த்தகம் உள்ளது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், போரின் தீவிரம் அச்ச்சத்தை ஏற்படுத்துகின்றது என்றும், மனிதகுல பேரழிவை ஏற்படுத்தும் போரில் இருந்து நம்மை நாம் எப்படி பாதுகாப்பது என்பது மேலும் அச்சத்தை உருவாக்குகின்றது என்றும் கூறினார்.
துனிசியாவிற்கும் லிபியாவிற்கும் இடையிலான பாலைவனத்தில் தனது மனைவியையும் மகளையும் இழந்த கேமரூன் நாட்டைச்சார்ந்த பாடோவை கடந்த நவம்பர் மாதம் சந்தித்ததை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், புலம்பெயர்ந்தோர் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் துன்பங்களை நினைவுகூர்ந்து, புலம்பெயர்ந்தோர் அனைவரும் தங்கள் நாடுகளிலேயே தங்குவதற்கும், வேறு இடங்களுக்கு புலம்பெயர்வதற்கும், உரிமை பெற்றவர்கள் என்றும் எடுத்துரைத்தார்.
இறுதியாக 2024 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் பொலினேசியா மற்றும் அர்ஜெண்டினாவிற்கு மேற்கொள்ள இருக்கும் பயணங்களைப் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தற்போது அரசியல் மாற்றங்கள் இருப்பதால் இப்பயணங்கள் ஆண்டின் இடைப்பகுதியில் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்