உரோம் என்னும் மறைப்பணி நிலத்தில் நாம் இருக்கின்றோம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
உரோம் மறைமாவட்டத்தில் இருக்கும் அருள்பணியாளர்கள் அனைவரும் மறைப்பணித்தளத்தில் இருக்கின்றார்கள் என்றும், உரோம் மறைமாவட்டம், மறைப்பணிக்கான நிலம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 13 சனிக்கிழமை உரோம் தூய இலாத்தரன் பெருங்கோவிலில் உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்கள் துறவறத்தார் மற்றும் நிரந்தரத் திருத்தொண்டர்கள் என ஏறக்குறைய 800 பேரை சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் மறைமாவட்டத்தில் திருத்தந்தையின் பிரதிநிதியாக பணியாற்றும் கர்தினால் Angelo De Donatis அவர்களால் தூய இலாத்தரன் பெருங்கோவிலில் வரவேற்கப்பட்ட திருத்தந்தை அவர்கள், நட்புறவுடன் கூடிய வழக்கமான நடையில் உரையாடல் வழி அவர்களுடன் கலந்துரையாடினார்.
கிறிஸ்தவ ஒழுக்கமுறைக் கோட்பாடுகளுக்கு இயைந்தமுறையில் வாழாமல் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் ஆசீர், திருமண அருளடையாளச்சடங்கு முறைகள் போன்றதல்ல என்று மீண்டும் வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், மறையுரைகள் 7 முதல் 8 நிமிடங்கள் வரை இருந்தால் போதுமானது என்று கூறி திறந்த மனதுடன் நட்புறவுடன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
பிற்பகல் செபம், உரையாடல், கர்தினால் அவர்களின் உரை, அருள்பணியாளர்கள் சந்திப்பு, கலந்துரையாடல் என ஏறக்குறைய மூன்று மணி நேரங்கள் நிகழ்ந்த இச்சந்திப்பிற்குப் பின், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திற்குத் திரும்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்